விஜய்-அட்லீ கூட்டணியில் உருவான மூன்றாவது படம் 'பிகில்'. இது கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதனிடையே இந்தப் படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய தோல்வி என்றும், ஏ.ஜி.எஸ். நிறுவனத்திற்கு ரூ. 20 கோடி நஷ்டம் என்றும் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது. இதற்குப் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா அப்போதே மறுப்பு தெரிவித்தார்.
இந்நிலையில் தற்போது லாக்டவுனில் 'பிகில்' பட வசூல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு ட்விட்டரில் பதிலளித்துள்ளார். அதில், “பிகில் படத்தின் மூலம் எங்களுக்கு லாபம் கிடைக்கவில்லை என்று நான் கூறியதாகச் சிலர் ஒரு அறிக்கையைப் பதிவிட்டு வருகின்றனர். அது உண்மையல்ல. நாங்கள் லாபம் ஈட்டி, அதற்கான வரிகளையும் கட்டியிருக்கிறோம். 'பிகில்' ஒரு பிளாக்பஸ்டர், அதுமட்டுமின்றி இன்னொரு படம் 'பிகில்' படத்தின் சாதனையை முறியடித்து புதிய சாதனையைப் படைக்க சில காலம் எடுக்கும்" என்று தெரிவித்துள்ளார்.