இயக்குநர் ராஜு முருகன் வழங்கும் ‘பராரி’ படத்தை அவரின் உதவி இயக்குநர் எழில் பெரியவேடி இயக்கியுள்ளார். ஷேன் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்தில் ஹரிஷங்கர், சங்கீதா கல்யாண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 22ஆம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில் படத்திற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பராரி படக்குழுவை நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாகச் சந்தித்தோம். அப்போது படம் தொடர்பான பல்வேறு சுவாரஸ்ய தகவலை நம்மிடையே பகிர்ந்து கொண்டனர். குறிப்பாக படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் தனது அனுபவங்களைப் பேசுகையில், “வாழ்வியல் சார்ந்த படங்களைப் பேசும்போது காதல், அரசியல் போன்ற பல விஷயங்களைத் திரையில் காட்சிப்படுத்துகின்றனர். அதுபோல காட்சிப்டுத்த பராரி படத்தின் டீம் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். இயக்குநர் எழில் பெரியவேடி என்னுடன் அண்ணன் மாதிரி பழகியதால் ஒளிப்பதிவைச் சிறப்பாக காட்சிப்படுத்த முடிந்தது.
படத்தின் ஆடை வடிவமைப்பு ஒளிப்பதிவில் முக்கிய பங்காற்றியது. படப்பிடிப்பு நடைபெற்ற ஊரில் இருந்தபோது, அங்குள்ள மனிதர்களைப் புகைப்படம் எடுத்துக்கொண்டே இருப்பேன். இந்த படத்திற்கான ஆடை வடிவமைப்பு பட்ஜெட் வெறும் 8000 ரூபாய்தான். படத்தில் நடிக்கும் கதாபாத்திரம் எல்லோரும் ரியலாக தெரிய வேண்டும் என்பதற்காக முதலில் தயாரிப்பாளர் ரூ.1 லட்சம் கொடுத்தார். ஆனால் எனக்கும் இயக்குநருக்கும் கடையில் வாங்கக் கூடாது என்று தோன்றியது. ஆனால் ஆடைகளுக்கு என்ன செய்யலாம் என்று யோசித்தபோது, படப்பிடிப்பு நடந்த ஊரிலுள்ள மக்களிடம் இருக்கும் பழைய துணிகளைப் பணம் கொடுத்து வாங்கினோம். அந்த ஆடைகளை பயன்படுத்தி நடிகர்கள் நடித்தது ஒளிப்பதிவுக்கு கட்சிதமாக இருந்தது.
அரசியல் தொடர்பான படங்களில் ஒளிப்பதிவு செய்யும்போது அரசியல் பற்றித் தெரிந்திருக்க வேண்டும். இல்லையென்றால் என்னால் இயக்குநருடன் தொடர்ந்து பயணிக்க முடியாது. கமர்சியலான இயக்குநர்களுடன் பணியாற்றும்போது டெக்னிக்க தெரிந்த வெறும் ஒளிப்பதிவாளராக இருந்தால் போதும். அரசியல் தெரிந்த ஒரு இயக்குநருடன் பணியாற்றும்போது அவருடைய எண்ணத்திற்கேற்ப ஒளிப்பதிவாளரும் இயக்குநருடன் இணைந்திருக்க வேண்டும். எனக்கு முழுமையான அரசியல் தெரியாது அப்படி இருக்கும்போது, இயக்குநருடன் கலந்து பேசி ஒளிப்பதிவு செய்வேன். இதற்கு முன்பு இரண்டு அரசியல் தொடர்பான படங்களில் பணியாற்றியிருக்கிறேன். நானும் நிறைய அரசியல் படங்கள் பார்த்திருக்கிறேன். ஆனால் ‘பராரி’ படம் பேசும் அரசியல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஏனென்றால் யார் பக்கமும் சார்ந்து இருக்காமல் பாரபட்சம் இல்லாத இந்த படம் அரசியலைப் பேசும்” என்றார்.