Skip to main content

எல்.ஐ.சி இணையதளத்தின் வாயிலாக இந்தியைத் திணிக்கத் துடிப்பதா? - ராமதாஸ் கண்டனம்

Published on 19/11/2024 | Edited on 19/11/2024
Trying to push Hindi through LIC website? Condemnation of Ramadoss

இந்திய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி நிறுவனத்தின் இணையதள பக்கத்தில் இந்தி மொழியில் செயல்பட்டு வந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இணையதளம் இந்தியில் மாற்றப்பட்டுள்ளதாகவும், மீண்டும் ஆங்கில மொழிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் எல்.ஐ.சி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

இதற்கு முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் என தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம்  எல்.ஐ.சியின் இணைய தளத்தின் முகப்புப் பக்கம் இதுவரை ஆங்கில மொழியில் இருந்த நிலையில் இப்போது இந்தியில் மாற்றப்பட்டுள்ளது.  இது பிற மொழி பேசும் மக்கள் மீதான அப்பட்டமான இந்தித் திணிப்பு ஆகும். எல்.ஐ.சி நிறுவனத்தின் இந்த  இந்தித் திணிப்பு முயற்சி கடுமையாக கண்டிக்கத்தக்கது.

இந்தியாவில் உள்ள அனைத்து மொழி பேசும் மக்களும் எல்.ஐ.சியின் வாடிக்கையாளர்களாக இருக்கும் நிலையில்,  இந்திக்கு மட்டும் திடீர் முன்னுரிமை அளிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. ரூ.10 மதிப்புள்ள நுகர்வோர் பொருட்கள் கூட தமிழ்நாட்டுக்கு விற்பனைக்கு அனுப்பப்படும் போது அதன் பெயர் உள்ளிட்ட விவரங்கள் தமிழ் அல்லது ஆங்கில மொழியில் தான்  அச்சிடப்படுகின்றன. ஆனால்,  தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவிலான வாடிக்கையாளர் தளத்தைக் கொண்டுள்ள எல்.ஐ.சி  அதன் இணையதளத்தின் முதன்மைப் பக்கத்தை இந்தியில் மட்டும் வைத்திருப்பதும், ஆங்கில மொழிச் சேவை வேண்டும் என்றால் அதை தேடிச் சென்று தேர்வு செய்ய வேண்டிய சூழலை உருவாக்கியிருப்பதும் தமிழ்நாட்டு வாடிக்கையாளர்களை இழிவுபடுத்தும் செயலாகும்.

மத்திய அரசும், மத்திய அரசின் நிறுவனங்களும் காலம் காலமாக தமிழ் உள்ளிட்ட பிற மொழி பேசும் மக்கள் மீது  தொடர்ந்து இந்தியைத் திணிக்க முயன்று வருகின்றன. இந்த முயற்சியில் அவை பல முறை சூடுபட்டாலும் கூட, அந்த முயற்சியை மட்டும் கைவிடுவதில்லை. மத்திய அரசாக இருந்தாலும்,  எல்.ஐ.சியாக இருந்தாலும் தாங்கள் அனைத்து மக்களுக்கும் உரித்தானவர்கள், இந்தி பேசும் மக்களுக்கு மட்டும் சொந்தமானவர்கள் அல்ல என்ற அடிப்படையை உணர வேண்டும்.

எல்.ஐ.சி இணையதளத்தின் முகப்புப் பக்கத்தை உடனடியாக ஆங்கிலத்திற்கு மாற்ற வேண்டும். இணைய தளத்தில் இப்போது இந்தி, ஆங்கிலம் ஆகிய இருமொழிச் சேவைகள் மட்டுமே உள்ள நிலையில் தமிழ்மொழிச் சேவையையும்  எல்.ஐ.சி உடனடியாகத் தொடங்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்