Skip to main content

பா.ரஞ்சித் படத்தின் டீசர் அப்டேட்

Published on 19/05/2022 | Edited on 19/05/2022

 

pa.ranjith's 'j.baby' movie teaser date announced

 

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் பா.ரஞ்சித். இவர் 'நீலம் புரொடக்சன்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் தயாரிப்பில் 'பரியேறும் பெருமாள்', 'இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு', 'ரைட்டர்' மற்றும் 'குதிரைவால்' போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. அடுத்ததாக 'J.பேபி' மற்றும் 'சேத்துமான்' படங்கள் உருவாகி வருகிறது. இதில் 'சேத்துமான்' படம் மே 27-ஆம் தேதி 'சோனி லைவ்' ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. பா.ரஞ்சித் 'சார்பட்டா பரம்பரை' படத்திற்கு பிறகு 'வேட்டுவம்' படத்தை இயக்குவதோடு தயாரித்தும் வருகிறார்.

 

'J.பேபி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்த நிலையில் தற்போது இப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் படி இப்படத்தின் டீசர் மே 21-ஆம் தேதி வெளியாகவுள்ளது. 'அட்டகத்தி' தினேஷ் நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் சுரேஷ் மாரி இயக்கியுள்ளார்.  ஊர்வசி மற்றும் லொள்ளு சபா மாறன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டோனி பிரிட்டோ என்பவர் இசையமைக்கிறார். 

 

 

 

       

சார்ந்த செய்திகள்

Next Story

தாய்க்காக மகன்களின் போராட்டம் வென்றதா? - J.பேபி விமர்சனம்

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
j.baby movie review

பிள்ளைகளுக்குள் தகராறு, பிரிவு, சொந்த வீடு ஏலத்தில் மூழ்கிப்போனது போன்ற  மன உளைச்சல்களால் மனப்பிறழ்வான அம்மா தவறுதலாக கொல்கத்தாவுக்கு  சென்றுவிட, அவரை மகன்கள் பத்திரமாக மீட்டு வந்தார்களா? குடும்பத்தின் பிரச்சனைகள் தீர்ந்ததா? என்பதைச் சொல்வதே J.பேபி திரைப்படத்தின் கதை. கடந்த  ஆண்டில் ஃபேலிமி என்ற மலையாளத் திரைப்படத்தில், ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாத ஒரு குடும்பத்திலிருக்கும் தாத்தா, காசிக்கு யாத்திரை செல்ல வேண்டுமென விரும்பியதால் யாத்திரைக்கு மொத்தமாகக் கிளம்பும் குடும்பத்தின் பயணத்தை வைத்து நகரும் கதையைப் போலவே இப்படத்திலும் பிரச்சனைக்குரிய அண்ணன் தம்பியின் ரயில் பயணத்தினூடாக கதை விரிகிறது.  

நிஜத்தில் நடந்த ஒரு சம்பவத்தையே படமாக உருவாக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் சுரேஷ் மாரி. இப்படத்தின் முதல் பாதியை கலகலப்பாக நகர்த்தும் பொறுப்பை தன் தோள்மேல் சுமந்து வெற்றி காண்கிறார் லொள்ளு சபா மாறன். தன் தம்பி மீது கோபத்தோடு முறைத்துக் கொண்டும், குடிக்கும் பழக்கத்தோடும் அவர் செய்யும் அலப்பறையால் அவ்வப்போது தியேட்டரே சிரிப்பலையால் நிரம்புகிறது. மிகவும் தன்மையான மகனாக, கணவனாக வலம் வருகிறார் அட்டைகத்தி தினேஷ். கொல்கத்தா நகரில் அம்மாவைக் காணத் தவிப்பதும், தள்ளிப்போவதும் இடையிடையே அண்ணனையும் இழுத்துப் பிடித்துக்கொண்டு நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இடைவேளை வரை நிதானமான நடிப்பை வெளிப்படுத்திய  ஊர்வசி, இடைவேளைக்குப் பின் நடிப்புச் சூறாவளியாக கதக்களியே ஆடியிருக்கிறார்.  இரண்டாவது பாதி முழுக்க ஊர்வசியே தனது நடிப்பால் நிறைத்திருக்கிறார்.   

j.baby movie review

பிள்ளைகள் மீது மட்டுமல்லாது எதிர்ப்படும் அனைத்து மனிதர்கள் மீதும் பாசத்தைப் பொழிவதாகட்டும், பிள்ளைகள் தன்னை மனநலக் காப்பத்தில் தள்ளிவிட நினைக்கிறார்கள், தன்னை குடும்பத்தில் சேர்ப்பதை பாரமாக நினைக்கிறார்கள் என்பதை அறிந்ததும் வெகுண்டெழுந்து பிள்ளைகளையே கல்லால் அடிக்க ஓங்குமளவுக்கு வேறொரு லெவலுக்கு தனது நடிப்பை மாற்றுவதாகட்டும்,  மனப்பிறழ்வு மனநிலையை மிக அருமையாக வெளிப்படுத்துகிறார். "எனக்கு ஸ்டாலினை தெரியும்", "எனக்கு ஜெயலலிதாவை தெரியும்" என்றெல்லாம் அவர் உதார் விடுவதும், போலீஸ் பேட்ரோலில் கண்ணயரும் காவலரிடம் ரவுசு காட்டுவதுமாக நம்மை சிரிக்க வைப்பவர், அடுத்த கணமே தனது மனப்பிறழ்வு  நிலையை உணர்ந்து வருந்துகையில், விழிகளில் கண்ணீரை வரவழைக்கிறார். மனப்பிறழ்விலும் தன் பிள்ளைகளிடம் நைனா நைனா என்று உருகுகையில் நெகிழ்ச்சியால் விழி நிறைக்கிறார். அப்பப்பா! என்ன மாதிரியான நடிப்புத் திறமை.

இப்படத்தின் நிஜ சம்பவத்தில் கொல்கத்தாவில் அம்மாவைத் தேடி வந்த மகன்களுக்கு உதவிய தமிழரை, அதே கேரக்டராகவே நடிக்க வைத்திருப்பது சிறப்பு. கொல்கத்தாவிலுள்ள காவல்துறை அதிகாரி, பெண்கள் காப்பக காப்பாளர் என வருபவர்களும் அருமையாக நடித்திருக்கிறார்கள். பிள்ளைகள் ஐவரில் இருவர் தவிர மற்றவர்களைப் புதியவர்களாக நடிக்க வைத்திருப்பது நன்றாக வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. வாரிசுகளுக்குள் சண்டையென்றாலும் சரி, மனப்பிறழ்வான தாயாக இருந்தாலும் சரி, மனசு விட்டுப் பேசினால் அனைத்தும் சரியாகும் என்பதை படத்தின் வாயிலாக உணர்த்தியிருக்கிறார்கள். 

பா. ரஞ்சித், அபே ஆனந்த் சிங், பியூஸ் சிங், ஸுரப் குப்தா மற்றும் அதிதி ஆனந்த் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். கொல்கத்தா ரயில் நிலையத்தை பருந்துப் பார்வையில் காட்டுவதில் தொடங்கி, கங்கை நதியின் பிரமாண்டத்தையும், கொல்கத்தா நகரின் நெருக்கடியையும் தனது கேமராவில் மிகச் சிறப்பாகப் படம் பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேது மாதவன். தாயின் தவிப்பையும் தாய்க்கும் பிள்ளைகளுக்குமான பாசத்தையும் வெளிப்படுத்தக்கூடிய அர்த்தமுள்ள வரிகளோடு பாடல்களைப் பின்புலமாகப் பாடவிட்டு காட்சிக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் டோனி பிரிட்டோ. பின்னணியிலும் காட்சியின் கனத்துக்காக நிதானித்தே இசைத்திருக்கிறார். ஒரே காட்சியில் தம்பி புத்திமதி சொல்லி அண்ணன் திருந்திவிடுவது, தம்பியோடு ஒட்டி அமரக்கூட பிடிக்காத அண்ணன், வீட்டில் மோதிரத்தைத் திருடுவது, அக்கா பெண் குழந்தை பெரியவளானதற்கு விசேஷத்தில் கலந்துகொள்ளாமல் செய்முறையை மட்டும்  செய்யும் தம்பி போன்ற காட்சிகள் சற்று மிகையாக, நாடகத்தனம் போல் தெரிகின்றன. இதுபோன்ற சின்னச்சின்ன குறைகளையெல்லாம் ஊர்வசியின் அபார நடிப்பு வெளித்தெரியாமல் செய்துவிடுகிறது. வெட்டு, குத்து, ரத்தச் சிதறலில்லாத குடும்பப் படமாக வந்திருப்பதில் திருப்தி. J.பேபியை வரவேற்கலாம்.

J.பேபி - கச்சிதம்

- தெ.சு. கவுதமன் 

Next Story

“தாயை விட தூய்மையான மந்திரம் இல்லை” - அப்டேட் கொடுத்த பா.ரஞ்சித்

Published on 10/02/2024 | Edited on 10/02/2024
pa.ranjith j.baby movie release update

இயக்குநர் பா. ரஞ்சித், 'நீலம் புரொடக்சன்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவர் தயாரிப்பில் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, ரைட்டர், சேத்துமான், பொம்மை நாயகி உள்ளிட்ட படங்கள் வெளியாகியிருக்கின்றன. கடைசியாக ப்ளூ ஸ்டார் படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

இந்த நிலையில், நீலம் தயாரிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படத்தின் அறிவிப்பை பா. ரஞ்சித் வெளியிட்டுள்ளார். அறிமுக இயக்குநர் சுரேஷ் மாரி இயக்க ஊர்வசி, அட்டகத்தி தினேஷ் மற்றும் லொள்ளு சபா மாறன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 'J.பேபி' என்ற தலைப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு டோனி பிரிட்டோ என்பவர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் வெளியானது. மேலும் 'நெடுமரம் தொலைந்ததே' என ஒரு பாடலின் லிரிக் வீடியோ அதற்கு முன்னதாக வெளியானது. 

இதையடுத்து இப்படம் பற்றி எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ப்ளூ ஸ்டார் பட நிகழ்ச்சியில் இப்படம் விரைவில் வெளியாகும் என ரஞ்சித் தெரிவித்திருந்தார். அதன்படி, நேற்று மாலை இப்படத்திற்கு சென்சார் போர்டு யு சான்றிதழ் வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் 'நீலம் புரொடக்சன்ஸ்' தயாரித்த படங்களுக்கு முதல் முறையாக எந்த சீனும் கட் செய்யப்படவில்லை என்றும் எந்த வசனங்களும் மியூட் செய்யவில்லை என்றும் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். 

இதையடுத்து இப்படம் வருகிற மார்ச் 8 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் “தாயை விடத் தூய்மையான மந்திரம் இல்லை.” எனக் குறிப்பிட்டுள்ளார்.