திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும், சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் எனப் பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது. 96வது ஆஸ்கர் விருது விழா வழக்கம் போல் லாஸ் ஏஞ்சல்ஸின் ஓவேஷன் ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. இதில் கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கத்தில் சிலியன் மர்பி நடித்துள்ள ஓபன்ஹெய்மர் படம் 13 பிரிவுகளில் போட்டியிட்டு 7 பிரிவுகளில் வென்று பலரது பாராட்டைப் பெற்றுள்ளது.
இதனிடையே ஆஸ்கர் 2024 சிவப்பு கம்பள வரவேற்பில், இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். அதனை வலியுறுத்தும் விதமாக ஆர்டிஸ்ட்ஸ் 4 சீஸ் ஃபையர் (Artists4Ceasefire) அமைப்பினுடைய ஒரு சின்னத்தை தங்களது ஆடையில் அணிந்திருந்தார்கள். ஒரு கைக்குள் ஒரு இதயம் இருப்பது போல அந்த சின்னத்தில் வரையப்பட்டிருந்தது. இதேபோல் கடந்த மாதம் நடந்த கிராமி விருது விழாவிலும் இந்த பேட்சை அணிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ஹாலிவுட்டை சேர்ந்த 400க்கும் மேற்பட்டவர்கள், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு எழுதிய கடிதத்தில் கையெழுத்திட்டார்கள் என்பது நினைவுகூரத்தக்கது.
இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வரும் மோதலில் இதுவரை முப்பதாயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். அறுபதாயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்தப் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.