திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் ஆண்டுதோறும், சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் எனப் பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 96ஆவது ஆஸ்கர் விருது விழா கடந்த மார்ச் 10ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது.
அதே சமயம், ஆஸ்கர் விருதுக் குழுவில் உறுப்பினராகச் சேர பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைத்துறை கலைஞர்கள், பிரபலங்கள் அழைக்கப்படுவார்கள். அதில், தொழில் ரீதியான தகுதி, அர்ப்பணிப்பு உள்ளிட்ட பல்வேறு தகுதிகளின் அடிப்படையில் ஆஸ்கர் குழுவின் உறுப்பினர்களைத் தேர்வு செய்யப்படுவார்கள். அந்த வகையில், 2024ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் உறுப்பினர் குழுவில் சேர உலகம் முழுவதும் உள்ள 487 திரைக்கலைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
அதில், இந்திர திரைப் பிரபலங்களான இயக்குநர் ராஜமெளலி, அவரது மனைவியும் ஆடை வடிவமைப்பாளரான ரமா ராஜமெளலி, நடிகை ஷபானா ஆஸ்மி, ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், இயக்குநர் ரீமா தாஸ் மற்றும் ஆர்ஆர்ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக ஆஸ்கர் விருது வென்ற நடன இயக்குநர் பிரேம் ரஷித் உள்ளிட்டோருக்கு உறுப்பினர்களாக சேர ஆஸ்கர் குழு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருது குழுவின் உறுப்பினர் பட்டியலில் இடம்பெறும் இந்திய திரைப் பிரபலங்களுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். ஆஸ்கர் விருது குழுவில் இயக்குநர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர் சூர்யா ஆகியோர் ஏற்கெனவே உறுப்பினர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.