Skip to main content

WFH பண்ணுறீங்களா...? இல்லை பொழுதுபோகலையா? இதைப் பாருங்க... வெளிய போகாதீங்க!

Published on 25/03/2020 | Edited on 25/03/2020

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுஹானில் தொடங்கிய கரோனா வைரஸ் தொற்று இன்று உலகம் முழுக்க 190 நாடுகளில் பரவி மக்களிடத்தில் பெரும் பீதியை கிளப்பி இருக்கிறது. இந்த கரோனா வைரஸ் தொற்று மிக எளிதில் பரவும் என்பதால் இதைத் தடுப்பதற்காக வீட்டிலேயே தங்கி பணி புரியுமாறு மத்திய அரசால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதே நிலையில்தான் பல உலக நாடுகளும் இருக்கின்றன.

 

tanhaji



வீட்டிலிருந்து பணிபுரிவது, விடுமுறையில் இருபது நாட்கள் இருப்பது என்பது கேட்பதற்கு மகிழ்ச்சியைத் தரலாம். ஆனால், சமூக விலங்காக சுற்றித் திரிந்த நமக்கு பொழுதை போக்குவது சிரமம்தான். பகல் முழுவதும் கணினியில் வேலை நடக்கும். மாலையிலும் தற்போதுள்ள சூழ்நிலையில் வீட்டைவிட்டு வெளியேறக் கூடாது என்பதால் கண்டிப்பாக அந்த விடுமுறையை மகிழ்ச்சியாக அனுபவிக்க முடியாது. கண்டிப்பாக நம்முடைய நலனுக்காவது வீட்டில் இருந்துதான் ஆக வேண்டும். ஏனென்றால் கரோனா தொற்று பாதிப்பானது நம்மில் ஒரு சிலரின் அலட்சியத்தால் கடுமையாகப் பரவ வாய்ப்புள்ளது.

ஏற்கனவே 'வொர்க் ஃபிரம் ஹோம்' முறை குறித்து எக்கச்சக்க மீம்ஸ் கிளம்பிவிட்டன. வீட்டை விட்டு வெளியேறாமலேயே  இருந்தால் கண்டிப்பாகப் போர் அடிக்கும், அந்த போரை திருப்பி அடிக்க, WFH ட்யூட்களுக்கு இருக்கும் முக்கிய வழி OTT தளங்கள். பல தளங்கள், பல நூறு படங்கள்... இவற்றில் சமீபத்தில் வந்த சுவாரசிய படங்களை எடுத்துக்கொடுத்து அவர்களுக்கு உதவலாமே என்ற எண்ணத்தில் இந்தக் கட்டுரை...

 

ayyapanum koshiyum



இந்தியாவில் மிகப்பெரிய ஓடிடி பிளாட்ஃபார்மாக இருப்பது ஹாட்ஸ்டார். அதில் தற்போது வெளியாகியுள்ள புதுப்படங்கள் என்றால், மூன்று ஹிந்திப் படங்கள் இருக்கின்றன. அஜய் தேவ்கன், சைஃப் அலிகான் ஆகியோர் நடிப்பில் வெளியான 'டன்ஹாஜி... தி அன் ஸங் வாரியர்' படமானது 200 கோடிக்கும் மேல் வசூலை வாரிக்குவித்தது. அந்தப் படம் ஹாட்ஸ்டாரில் ஹாட்டாக வந்திருக்கிறது.  இதனையடுத்து இருப்பது ஆசிட் வீச்சில் தாக்கப்பட்ட பெண்ணின் உண்மைக் கதையை மையமாக வைத்து தீபிகா நடித்த 'சப்பாக்'. கொஞ்சம் சீரியஸ் படங்களை விரும்புவோருக்கான சாய்ஸ் அது.  தமிழில் 'தலைவி' படத்தில் ஜெயலலிதாவாக நடித்துக்கொண்டிருப்பவர் கங்கனா ரனாவத். பல ஆண்டுகளுக்கு முன்பு 'தாம் தூம்' படத்தில் 'ஜெயம்' ரவியுடன் இணைந்து நடித்தவர். அவர் பெண் கபடி வீராங்கனையாக நடித்திருக்கும் படமான 'பங்கா'வும் ஹாட்ஸ்டாரின் லேட்டஸ்ட் வரவு. இந்த மூன்று படங்களும் ஹாட்ஸ்டார் ஓடிடி பிளாட்பார்மில் பார்க்கக்  கிடைக்கின்றன. தனிமையைப் போர் அடிக்காமல் இனிமையாக்க ட்ரை செய்து பாருங்கள்.

அப்படியே நெட்பிளிக்ஸ் பக்கம் வந்தால் நிறையவே கொட்டிக்கிடக்கிறது. அதில் இரண்டு புதுப்படங்களை பரிந்துரை செய்கிறேன். அல்லு அர்ஜூன், பூஜா ஹெக்டே ஆகியோர் நடிப்பில் வெளியாகிய, தெலுங்கின் சமீபத்திய சூப்பர் ஹிட் படமான 'அலா வைகுந்தபுரமுலோ' என்ற செம்ம  ஃபேமிலி டிராமா உங்கள் ஃபேமிலியோடு கண்டுகளிக்க உகந்தது. கியாரா அத்வானி நடிப்பில் தற்போது நெட்பிளிக்ஸ் தயாரித்து வெளியிட்டுள்ள படமான 'கில்டி'யும் ஒர்த் வாட்சிங் என்கிறார்கள் நெட்பிளிக்ஸ் ரசிகர்கள்.

 

ala vaigundapuramalo



லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்... இந்தியாவில் வெளியாகும் பல படங்களை ஆன்லைனில் வெளியிடும் ஓடிடி பிளாட்பார்மான அமேசான் ப்ரைம் வீடியோ. வழக்கம்போல நிறைய படங்களை இந்த மாதத்தில் வெளியிட்டுள்ளது. அதில் பலரின் பாராட்டையும் கவனத்தையும் பெற்று வரும் கன்னட படமான  'டியா' உள்ளது. '96' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'ஜானு' உள்ளது. டான்ஸில் பட்டையைக் கிளப்பும் ரெமோ டி'சௌசாவின் படங்களின் வரிசையில் தற்போது லேட்டஸ்ட்டாக வெளியாகியுள்ள 'ஸ்ட்ரீட் டான்சர் 3டி' படம் ப்ரைமில் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் ப்ரித்வி ராஜ் மற்றும் பிஜு மேனன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி வேற லெவல் வரவேற்பைப் பெற்ற படம் 'அய்யப்பனும் கோஷியும்'. மூன்று மணிநேர பயணமாக இருந்தாலும் செம இன்ட்ரெஸ்டிங்காக இருக்கிறது இந்தப் படம்.

இது போக நூற்றுக்கணக்கான படங்கள், சிரீஸ்கள் பல்வேறு தளங்களிலும் இருக்கின்றன. இவற்றில் படம் பார்க்கலாம், கிண்டிலில் புத்தகம் படிக்கலாம், வீட்டில் தனித்திருந்து கரோனோவை ஒழிக்க  உதவியாக இருக்கலாம். பிற மொழி படங்களாக இருக்கிறதே... தமிழ் படங்களெல்லாம் சஜஸ்ட் பண்ண மாட்டீங்களா என்று கேட்டால்... பல தமிழ் படங்களும் இருக்கின்றன. அவற்றின் விமர்சனங்களும் நம் தளத்தில் இருக்கின்றன. படித்துவிட்டு படத்தைப் பார்த்து மகிழுங்கள்...

நக்கீரன் திரைவிமர்சன பக்கம்

 

 

சார்ந்த செய்திகள்