Skip to main content

“தடையில்லா சான்றிதழ் வழங்கியதற்கு நன்றி” - நயன்தாரா

Published on 20/11/2024 | Edited on 20/11/2024
nayanthara thanked his movies producers for giving noc for his marriage documentry

இயக்குநர் விக்னேஷ் சிவன் - நடிகை நயன்தாரா திருமண வாழ்க்கை ‘நயன்தாரா; பியாண்ட் தி ஃபேரி டேல்’(Nayanthara: Beyond The Fairy Tale)என்ற பெயரில் ஆவணப்படமாக உருவாகியுள்ளது. நெட் ஃபிளிக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் நானும் ரௌடி தான் படப்பிடிப்பில் விக்னேஷ் சிவனும் - நயன்தாராவும் பேசும் வீடியோ மூன்று வினாடி இடம்பெற்றிருந்தது.   

இதையடுத்து நானும் ரௌடி தான் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், ட்ரைலரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அந்த மூன்று வினாடி வீடியோவிற்கு பத்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நயன்தாராவுக்கு நோட்டிஸ் அனுப்பினார். இதனை நயன்தாரா தனது அறிக்கையின் மூலம் தெரிவித்து, “தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட ஏற்கனவே இணையதளங்களில் பகிரப்பட்ட ஒரு காட்சிக்கு பத்து கோடி நஷ்ட ஈடு கேட்கப்பட்டு இருப்பது மிகவும் விநோதமானதாக இருக்கிறது. நானும் ரௌடிதான் படத்தின் காட்சிகளையும், பாடல்களையும், புகைப்படங்களையும் பயன்படுத்தும் வகையில், உங்களிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறுவதற்காக 3 வருடங்களாக காத்திருந்தோம். எங்கள் எல்லாப் போராட்டங்களும் பலனளிக்காத நிலையில், அந்த முடிவையே கைவிட்டு, ஆவணப்படத்தில் திருத்தங்கள் செய்தோம். 

தடையில்லா சான்றிதழ் மறுக்கப்பட்டது வியாபார ரீதியானதாகவோ அல்லது சட்ட ரீதியானதாகவோ இருந்தால் நிச்சயமாக அதனை ஏற்றுக் கொண்டிருப்பேன். ஆனால், முழுக்க முழுக்க என்மீதான தனிப்பட்ட வெறுப்பால் மட்டுமேயான, உங்களது இந்த நடவடிக்கைகளை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?. 'நானும் ரௌடிதான்' படம் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கும். பாடல்களுக்கும் தடையில்லா சான்றிதழ் வழங்காததற்கான காப்புரிமை காரணங்களை நீங்கள் நீதிமன்றத்தில் விளக்கிக் கொள்ளுங்கள். ஆனால், கடவுள் மன்றத்தில் நீங்கள் தெளிவுப்படுத்த வேண்டிய சில விசயங்கள் இருக்கின்றன. எனது திரைப்பயணத்தின் இனிமையான நினைவுகளைக் கொண்ட பல்வேறு காட்சிகள் ஆவணப்படத்தில் இடம்பெற்றிருக்கின்றன.

அதற்கான அனுமதிக்காக வேறு பல தயாரிப்பாளர்களை அணுகியபோது பேரன்போடு அனுமதித்தார்கள். அப்போதுதான், உங்களில் இருந்து எவ்வளவு மாறுபட்டவர்களாக அவர்கள் இருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது” என குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்த செயல் கீழ் தனமானது என்றும் மேடைகளில் பேசுவது போல் உங்களால் நடந்து கொள்ள முடியாது என்றும் தனுஷை கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த விவகாரம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை கிளப்ப, நயன் தாராவுக்கு ஆதரவாகவும் தனுஷுக்கு ஆதரவாகவும் சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.

இதையடுத்து சர்ச்சைகளுக்கு மத்தியில் நயன்தாராவின் பிறந்தநாளான கடந்த 18ஆம் தேதி இந்த ஆவணப் படம் நெட் ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது. அதில் நானும் ரௌடி தான் படத்தின் படப்பிடிப்பு தள காட்சிகள் 20 வினாடிக்கு மேலாக இடம் பெற்றிருந்தது. ட்ரைலரில் இடம்பெற்ற 3 வினாடி காட்சிக்கு தனுஷ் தரப்பில் இருந்து காப்புரிமை கேட்கப்பட்ட நிலையில் அந்த காட்சிகள் நீக்கப்படாமல் 20 வினாடிக்கும் மேலாக காட்சிகள் இருப்பது இந்த விவகாரத்தை மேலும் பெரிதாக்கியது. 

இந்த நிலையில் நயன்தாரா இந்த ஆவணப்படத்திற்காக தடை இல்லா சான்றிதழ் வழங்கிய தயாரிப்பு நிறுவனங்களுக்கு அந்நிறுவனத்தின் தயாரிப்பாளர்களின் பெயர்களை குறிப்பிட்டு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். முதலில் பாலிவுட்டில் ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி கௌரி கான்(ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட்) ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார். பின்பு கோலிவுட்டில் கே.பாலச்சந்தர்(கவிதாலயா புரொடைக்‌ஷன்), சுபாஸ்கரன்(லைகா), ஐசரி கணேஷ் (வேல்ஸ் இண்டர்நேஷ்னல்), ஏ.ஜி.எஸ் நிறுவனம், உதயநிதி ஸ்டாலின்(ரெட் ஜெயண்ட்), சிவாஜி புரொடைக்‌ஷன், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், ஸ்டூடியோ க்ரீன் என பல்வேறு தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. பின்பு டோலிவுட் துறையிலும் மோலிவுட் துறையிலும் தான் பணியாற்றிய தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்த பட்டியலில் தனுஷ் மற்றும் அவரது தயாரிப்பு நிறுவனம் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்