
தெலுங்கு திரையுலகில் பல படங்களில் நடித்துள்ளவர் நடிகர் நாகசௌர்யா. தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் சாய் பல்லவி நடிப்பில் வெளியான 'தியா' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வெளியானது. இதனைத் தொடர்ந்து தெலுங்கு படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் நடிகர் நாகசௌர்யா ஒரு இளைஞனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது. சாலையில் ஒரு இளைஞன் அவரது காதலியை கன்னத்தில் அறைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அதைக் கண்ட நடிகர் நாகசௌர்யா, அந்த காதலனிடம் "மன்னிப்பு கேள்" என்கிறார். அதற்கு அந்த காதலன், அவள் என் காதலி எனக் கூற, அந்த பெண் உங்கள் காதலியாக இருக்கலாம், அதற்காக சாலையில் அந்த பெண்ணை அடிப்பியா... அது தவறு... என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வீடியோவை பார்த்த சினிமா ரசிகர்கள் நடிகர் நாகசௌர்யா நடந்து கொண்டதைப் பாராட்டி வருகின்றனர். சிலர் இது அவரின் படத்துக்கு ஒரு ப்ரோமோஷனாகக் கூட இருக்கலாம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.