தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்குழுக் கூட்டம் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடைபெற்றது. சங்கத் தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் 2022-2023ஆம் ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட வரவு-செலவு கணக்கு, எதிர்கால பொருளாதாரத் திட்டமிடல், எதிர்கால நலத்திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து முடிவெடுக்கப்பட்டது. மேலும் புதிய கட்டிடம் கட்ட ரூ.40 கோடி கடன் பெற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்பு செய்தியாளர்களை நிர்வாகிகள் கூட்டாகச் சந்தித்தனர். அப்போது பேசிய விஷால், "இரண்டாவது முறையாக எங்களைத் தேர்ந்தெடுத்ததன் காரணம் எங்க மேல் உள்ள நம்பிக்கை தான். அந்த நம்பிக்கை வீண் போகாமல் கடைசி கோரிக்கையாக நாங்க வச்சது, அந்த கட்டடம் மட்டும் தான். மற்ற எல்லாத்தையும் நாங்க நிறைவேத்திட்டோம். விரைவில் அந்தக் கடைசி கோரிக்கையும் நிறைவேத்துவோம். அடுத்த கூட்டம் நடிகர் சங்க கட்டடத்தில் தான் நடக்கும். நடிகர் சங்கத்துக்கான இடத்தை மீட்டதே ஒரு பெரிய விஷயமாக கருதுகிறோம். அதேநேரம், தேர்தல் நடத்துவதற்கு முன்னால், இன்னும் ஒரு 5 மாத காலம் கொடுத்திருந்தால், நாங்கள் கட்டடத்தை கட்டி முடித்திருப்போம். நிறைய தடங்கல் வருகிறது. இம்முறை கட்டடம் நிச்சயம் கட்டப்படும்" என்றார்.
பின்பு பேசிய கார்த்தி, "ஆசியாவில் ஒரு முக்கிய கட்டடமாக நடிகர் சங்க கட்டடம் இருக்கும். நிதி இருந்தால் மட்டுமே அதை உரிய காலத்திற்குள் கட்டிமுடிக்க முடியும். அதற்கான எல்லா வேலைகளையும் செஞ்சிகிட்டு இருக்கோம். கூடிய சீக்கிரம் வங்கியில் இருந்து நிதி வந்தவுடன் வேலைகளை ஆரம்பிப்போம். கொரோனாவிற்கு பிறகு எல்லா விலைகளும் 30 சதவீதம் அதிகமாகியிருக்கு. ரூ.40 கோடி வாங்க தகுதி இருக்கு. கடனுக்கான ஒப்புதலை வாங்கியிருக்கோம்" என்றார்.