மொஹிதா சினி டாக்கீஸ் தயாரிப்பாளர் எம்.சுப்ரமணியன் தயாரித்த 'மாணிக்' திரைப்படத்தைப் பற்றி இயக்குனர் மார்ட்டின் பேசியபோது... "நான் ஒரு விஸ்காம் மாணவன். எனக்கு மிகப் பெரிய ஆசை ஒரு தனியார் நியூஸ் சேனலுக்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்பது. ஆனால், அங்கோ அவர்கள் எனக்கு சரியான ப்ரொபைல் இல்லை என்று சொல்லி வெளியே அனுப்பினார்கள். சரியான மீடியா ப்ரொபைல் வேண்டும் என்று நான் குறும்படம் ஒன்றை எடுத்தேன். அதை நாளைய இயக்குனர் நிகழ்ச்சிக்கு அனுப்பினேன். ஆனால் நான் செலக்ட் ஆகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றேன். இறுதிச் சுற்று வரை சென்றேன். இயக்குநர் சுந்தர். சி அவர்கள் என்னை இதே பாணியில் பணியாற்ற சொன்னார். நானும் லாஜிக் இல்லாமல் கதை செய்யும் பாணியில் இப்போது வரை பயணித்து 'மாணிக்' படத்தை இயக்கியுள்ளேன். 'மாணிக்' என்னுடைய வாழ்க்கையில் நடந்த கதை என்றே கூறலாம். இப்படத்தின் கதாபாத்திரங்கள் மிகவும் புதுமையாக இருக்கும். தரன் படத்துக்கு மிகச் சிறப்பான இசையை தந்துள்ளார். அவர் நான் கேட்டதை சரியான அளவுகோலில் பின்னணி இசையாக தந்துள்ளார்.
அவருடன் விவாதித்து பின்னணி இசை பணியாற்றியது மறக்க முடியாதது. நாயகன் மா.கா.பா ஆனந்துக்கு அவர் நடித்த படங்களில் இது கண்டிப்பாக பெஸ்ட்டாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அவர் ஒரு ஒன் டேக் ஆர்ட்டிஸ்ட் என்று சொல்ல வேண்டும். நாம் சொல்வதை சரியாக கவனித்து அதிகம் சிரத்தை எடுத்து ஒரே டேக்கில் நடிப்பார். அவருடைய மனைவியிடம் நான் நடித்ததில் இது தான் மிகச் சிறந்த படம் என்று அவரே கூறியதாக என்னிடம் கூறியுள்ளார். படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் மிகப்பெரிய அளவில் பேசப்படும். ஒவ்வொரு கதாபாத்திரமும் வெற்றி பெற வேண்டும் என்று நாங்கள் அதிகம் உழைத்துள்ளோம். அது படத்தில் கண்டிப்பாக தெரியும். படத்தில் உள்ள முன்னணி நடிகர்கள் அனைவரும் நான் கேட்டதை கொடுத்தனர். அவர்களுடன் பணியாற்றியது மற்றும் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கொடுத்த சுதந்திரம் எல்லாம் படத்தை சிறப்பாக உருவாக்க உதவியது" என்றார் இயக்குனர் மார்ட்டின். மொஹிதா சினி டாக்கீஸ் தயாரிப்பாளர் M.சுப்ரமணியன் தயாரித்து புதுமுக இயக்குனர் மார்ட்டின் இயக்கிய "மாணிக்" திரைப்படம் நாளை 4-ஆம் தேதி திரைக்கு வருகிறது.