எம்.பத்மாகுமார் இயக்கத்தில் மம்மூட்டி நடிப்பில் உருவாகியுள்ள வரலாற்று படம் மாமாங்கம். இந்த படத்தில் மம்மூட்டியுடன் உன்னி முகுந்தன், தருண் ஆரோரா, அனு சித்தாரா, கனிகா, இனியா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். மலையாள மொழியில் உருவாகியிருக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் டப் செய்து வெளியிடப்படுகிறது.
வருகிற டிசம்பர் 12ஆம் தேதி வெளியாகும் இந்த படத்திற்காக சென்னையில் செய்தியாளர்களை சந்திதது படக்குழு. அப்போது நடிகர் மம்மூட்டி பேசுகையில், "தமிழ்நாட்டில் மேடையில் பேச பயமாக இருக்கிறது. ஏனென்றால், சினிமாவில் நான் சரியாகத் தமிழ் பேசியிருப்பதை பார்த்து இருப்பீர்கள். ஆனால் மேடையில் தப்பு தப்பாகத் தான் பேசுவேன்.
வரலாற்றுப் படத்தில் நடிக்கும்போது மட்டும், அதை ஒரு பணியாக எடுத்துச் செய்வேன். அப்படி இந்தப் படத்தில் ஒரு அங்கமாக இருப்பதே சந்தோஷம்தான் எனக்கு. ஒரு நடிகனாக மக்களிடம் ஒரு வரலாற்றை கொண்டுபோய் சேர்ப்பதே மகிழ்ச்சியான ஒரு விஷயம்தான்.
100 வருடங்களுக்கு முன்பு மலையாளம் என்ற மொழியே இல்லை. கேரளாவே அப்போது இல்லை திருவிதாங்கூர் மற்றும் மலபார் தான் இருந்தது. அப்போது மலையாளம் பேசுபவர்கள், தெலுங்கு பேசுபவர்கள் என்று அனைவருமே மெட்ராஸ் ஸ்டேட்டில்தான் இருந்திருக்கிறோம். பிரிட்டிஷ்காரர்கள் போனவுடன்தான் அனைத்தையும் பிரித்துச் சரி பண்ணினோம். இப்போது தமிழ், மலையாளம், தெலுங்கு என மொழிகளுக்கு ஏற்ப இடங்களை பிரித்துக்கொண்டுள்ளோம். இப்படி மொழியைத் தாண்டி கலையை ரசிப்பதே பெரிய விஷயம்.
மொழியைத் தாண்டி பல படங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதில் பேசும் மொழியைத் தாண்டி உணர்வுபூர்வமான காட்சிகள்தான் நம்மை படத்துடன் ஒன்றிணைய வைக்கும். அந்தக் காட்சிகளுக்கு எல்லாம் மொழியே கிடையாது. இந்தப் படம் சாதாரணமான ஒரு ரிவெஞ்ச் ஸ்டோரி கிடையாது. என்றைக்கோ நடந்த ஒரு சம்பவத்துக்காக தொடர்ச்சியாகப் பழிவாங்கிக் கொண்டிருக்கும் ஒரு குடும்பத்தின் கதை.
யாருக்காக கொல்கிறோம், யாருக்காக சாகிறோம் என்பதே படத்தின் க்ளைமாக்ஸில் சொல்லப்பட்டுள்ள விஷயம். ஆகையால் தான் இந்தப் படம் எப்போதுமே முக்கியம். மீதி அனைத்தையுமே படம் பேசும். இந்தப் படத்தின் தமிழ் வசனங்களை நான் கேட்டேன் என்பதற்காக இயக்குனர் ராம் எழுதிக் கொடுத்திருக்கிறார்.
நான் பேசுவது எல்லாமே ராம் பேசுவது போலத்தான் இருக்கும். இந்தப் படத்தில் என்னை சரியான முறையில் தமிழ் பேச வைக்க ரொம்ப கஷ்டப்படுத்திவிட்டார். இதை விட 'பேரன்பு' எளிதான படமாக இருந்தது. தமிழ்ப் படமாக இருக்க வேண்டும் என்பதாலேயே ராமை உள்ளே கொண்டு வந்தேன். ரொம்ப சந்தோஷமாகவே பண்ணிக் கொடுத்தார்" என்றார்.