Skip to main content

"நா.முத்துக்குமாரின் உதவியாளன் என்ற தகுதிக்காகவே விஜய் சார் என்னை சேர்த்துக்கொண்டார்!" - பாடலாசிரியர் வேல்முருகன்

Published on 26/04/2020 | Edited on 26/04/2020


மறைந்த, தமிழ் திரையிசை ரசிகர்கள் மறக்க முடியாத பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் உதவியாளராக தொடங்கி 'நேரம்' படத்தின் மூலம் பாடலாசிரியராகி, தற்போது இயக்குனர் ஏ.எல்.விஜயின் உதவி இயக்குனராகப் பணியாற்றிவரும் வேல்முருகனிடம் பேசினோம். சென்ற பகுதியில் தன் விருப்பமான பாடல்களையும் வரிகளையும் பகிர்ந்த அவர், இப்போது நா.முத்துக்குமாரிடமிருந்து இயக்குனர் விஜய் வரை தான் பயணித்த கதையை சொல்கிறார்...


"இன்னும் போகவேண்டிய தூரம் அதிகமாக இருக்கிறது. இருந்தாலும் சிறு கூழாங்கல் என்றாலும் அதுவும் பல நதிகளை கடந்துதான் அந்நிலையை அடைந்திருக்கும். அண்ணன் நா.முத்துக்குமாரிடம் உதவி இயக்குநராக நான் சேர்ந்து ஆண்டுகள் பல ஆன பின்னும் ஒரு திரைப்படத்தைக்கூட அவர் இயக்குவதற்கு தமிழ் திரையிசைப் பாடல்கள் எழுதும் பணி  அவருக்கு வாய்ப்பளிக்காமல் தடுத்துக்கொண்டே வந்தது; தடுத்தும்விட்டது. அப்போது நிறைய இயக்குநர்கள் அலுவலகத்திற்கு வந்து பாட்டு எழுதி வாங்கிப் போவார்கள். நா.முத்துக்குமார் அண்ணன் எந்தப் படத்தையும் இயக்கப் போவதில்லை என்று தெரிந்த பின்னும், அங்கு வரும் எந்த இயக்குநரிடமும் நானாகச் சென்று உதவி இயக்குநராக என்னைச் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று கேட்டதே இல்லை.

 

 

na.muthukumar

நா.முத்துக்குமார்



ஒரு நாள் அண்ணனிடம், "நான் எதாவது ஒரு படத்துல ஒர்க் பண்றேன் அண்ணே, யார்கிட்டயாவது சொல்லிவிடுங்கண்ணே" என்றேன். அவர் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்துவிட்டு, என்ன நினைத்தாரென்று தெரியவில்லை "யார்கிட்ட தம்பி சேத்துவிடனும்?" என்று கேட்டார். நான் இயக்குநர் ஏ.எல்.விஜய் பெயரைச் சொன்னேன். கொஞ்சம் யோசித்தவர், "சரி தம்பி பார்க்கலாம்" என்று சொல்லியிருந்தார். அப்போது 'மதராச பட்டினம்' படம் துவங்கி ஓரிரண்டு பாடல்கள் முடிந்த நேரம். அப்படத்திற்கான பாடல்கள் எழுதும் நேரம் இரவில் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடந்துகொண்டிருந்தன. ஒரு நாள், இரவு ஒன்றரை மணிக்கு பாடல் எழுதி முடிக்கப்பட்டது. அப்போது இயக்குநர் விஜயிடம் அண்ணன், "தம்பி உங்ககிட்ட உதவி இயக்குநரா சேர ஆசைப்படுகிறார்" என்றார். அதற்கு இயக்குநர், பிறகு சொல்வதாக சொன்னார். மனதிற்கு ஆறுதலாக இருந்தது.
 

http://onelink.to/nknapp


அதன்பிறகு காலம் என்னை சிறுவனின் கையில் அகப்பட்ட பழைய சைக்கிள் டயரைப் போல பயன்படுத்திக்கொண்டிருந்தது. கடைசியில், நானும் சில படங்களுக்குப் பாடல்கள் எழுதி பாடலாசிரியனாக ஆனேன். ’காதல் என்னுள்ளே வந்தநேரம்’ பாடலைக் கேட்டு அண்ணனும் நல்லா இருப்பதாக சொன்னார். இடையில் 'எனக்குள் ஒருவன்' திரைப்படத்திற்கு வசனமும் எழுதி அப்படியே ஒத்தையடி பாதையாகவே போய்க்கொண்டிருந்தேன். இடையில் அண்ணன் மீளாத்துயரில் எம்மை ஆழ்த்திவிட்டு சென்ற அன்று, நான் மீண்டும் இயக்குநர் விஜய் அவர்களை சந்தித்தேன். அண்ணன் தங்கியிருந்த சென்னை பாடியிலிருக்கும் அவர் வீட்டிலிருந்து அவரை எரியூட்டப்பட்ட அயனாவரம் சுடுகாடு வரை, இயக்குநர் விஜய் அவர்கள் அண்ணனின் பூதவுடல் ஏற்றிய வண்டிக்குப் பின்னால் நடந்தும் ஓடியும் வந்துகொண்டிருந்தார். நானும் அவ்வண்ணமே நடந்தும் ஓடியும் சென்றுகொண்டிருந்தேன். அங்கு அவரிடம் நான் எதுவுமே பேசவில்லை. சொல்லப்போனால் எனக்காக அண்ணன் அவரிடம் சிபாரிசு செய்ததையே மறந்துவிட்டிருந்தேன். பிறகு பதினாறாம் நாள் காரியத்தில் நக்கீரன் கோபால் அண்ணனோடு இயக்குநர் விஜய் சாரை பார்த்ததோடு சரி. காலம் தன் போக்கில் ஓடிக்கொண்டிருந்தது. ஓரிராண்டாண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் விஜய் சாரைபோனில் தொடர்புகொண்டு பேசினேன். அலுவலகம் வரச்சொன்னார். போனேன். என்னைப் பற்றி விசாரித்தார். அவர் இப்போது இயக்கிக்கொண்டிருக்கும் ’தலைவி’ திரைப்படத்தில் நானும் ஓர் உதவி இயக்குநராக வேலை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

 

director a.l.vijay

ஏ.எல்.விஜய்



பட வேலைகள் ஆரம்பித்து ஒரு ஷெட்யூல் ஷூட்டிங் முடிந்தும் வந்துவிட்டு அடுத்த ஷெட்யூலுக்கான வேலைகளைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது, ’தனுசு ராசி நேயர்களே’ திரைப்படத்தின் இயக்குநரும் விஜய் சாரின் உதவி இயக்குநருமான சஞ்சய் அவர்கள் அவ்வப்போது அலுவலகத்திற்கு வருவார். உரையாடிவிட்டுச் செல்வார். ஒருநாள் "வேற என்ன படமெல்லாம் ஒர்க் பண்ணீங்க?" என்று கேட்டார். நான் என்னைப் பற்றிச் சொன்னதும், ஆச்சர்யப்பட்டு "நான் தினமும் கேட்கிற பாடல்களில் ஒன்று 'நேரம்' திரைப்படத்தில் 'காதல் என்னுள்ளே வந்த நேரம்’ என்ற பாடல், அது நீங்க எழுதுனதுன்னு தெரியாம போச்சே” என்றார். அவரிடம் இதைச் சொல்லிய அரைமணி நேரத்தில் இயக்குநர் வந்து என்னைக் கூப்பிட்டார். "என்னைய்யா.. நீங்க பாட்டெல்லாம் எழுதியிருக்கீங்களா.. என்ன பாட்டு எழுதியிருக்கீங்க?" என்று ஐபேடில் சர்ச் பண்ணிப் பார்த்துவிட்டு "நல்ல நல்ல பாட்டெல்லாம் எழுதியிருக்கீங்களே இதை ஏன் எங்கிட்ட சொல்லல..." என்று கேட்டதும் எனக்கு ஒன்றுமே புரியாமல் ஒரு நிமிசம் தலை சுத்திடுச்சி. "சார் உங்களுக்கு முன்னாடியே சொல்லிட்டேன் சார்" என்றேன். உதவி இயக்குனர் வாய்ப்பு கேட்டு அவரைப் பார்த்தபோது சொன்னது அவருக்கு நினைவில் இல்லை என்பது புரிந்தது. இருந்தாலும் ரொம்பவும் சந்தோசப்பட்டார். அங்கிருந்த உதவி இயக்குநர்களிடம் சொல்லி சந்தோசப்படுத்தினார்.

 

velmurugan

வேல்முருகன் 


நான் அதுநாள் வரை நாம இவ்வளவு பாட்டு வசனமெல்லாம் எழுதியிருக்கிறதாலதான் வாய்ப்பு கொடுத்தார்னு நெனைச்சிக்கிட்டு இருந்தேன். ஆனா நா.முத்துக்குமாரின் உதவியாளன் என்ற தகுதிக்கு மட்டுமே உதவி இயக்குநரா சேர்த்துக்கொண்டார் என்பதை நினைத்து அவர் மீது நிறைய மரியாதை கலந்த அன்பு கூடியது. நா.முத்துக்குமார் அண்ணன் இருந்தபொழுது என்றோ எனக்காக விஜய் சாரிடம் உதவி இயக்குநர் வேலைக் கேட்டது இன்று அவருக்கும் நினைவில் இல்லை நானும் ஞாபகப்படுத்தவில்லை. ஆனால் அண்ணன் எனக்கு செய்ய நினைத்ததை அவர் இல்லாதபோதும் செய்துவிட்டார்."

பேட்டியின் இன்னொரு பகுதி...

என் லாக்டவுன் தினங்களை நிறைத்த பாடல் வரிகள்... பகிர்கிறார் பாடலாசிரியர் வேல்முருகன்

 

 

சார்ந்த செய்திகள்