நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் வெளியான பரியேறும்பெருமாள், குண்டு ஆகிய படங்கள் நல்ல வரவேற்பும், வெற்றியையும் பெற்றது. இப்படங்களை தொடர்ந்து அடுத்தடுத்து தயாரிப்புப்பணிகளில் இந்நிறுவனம் ஈடுபட்டு வரும் நிலையில் நடிகர் கலையரசன், அஞ்சலிப்பாட்டில் நடித்த 'குதிரைவால்' என்கிற படத்தை வெளியிடுகிறது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம். 'குதிரைவால்' படம் ரெகுலரான சினிமாவிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படமாக வந்திருக்கிறது. அறிமுக இயக்குனர்கள் மனோஜ் லியோனல் ஜாசன் - ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இயக்கியிருக்கிறார்கள், ராஜேஷ் எழுதியிருக்கிறார்.
உளவியல், ஆழ் மன கற்பனைகள், மற்றும் டைம் டிராவல் குறித்த ஒரு அறிவியல் புனைவுப்படமாகவும், வழக்கமான சினிமாவிலிருந்து மாறுபட்டதாகவும், மேஜிக்கல் ரியாலிச சினிமாவாக இந்தபடம் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவில் இது ஒரு புதிய முயற்சியாக இப்படத்தை உருவாக்கியிருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் கிராபிக்ஸ் முறையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. யாழி பிலிம்ஸ் தயாரிப்பில் விக்னேஷ் சுந்தரேசன் இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. விரைவில் இப்படம் வெளியாக இருக்கிறது.