கேரளாவில் கடந்த 2017ஆம் ஆண்டு முன்னணி நடிகை ஒருவர் படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பும் வழியில் பாலியல் கொடுமைக்கு உள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை அடுத்து படப்பிடிப்பு தளத்தில் நடிகைகள் மற்றும் வேலை செய்யும் அனைத்து நிலை பெண்களுக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மலையாள திரைத்துறையின் பெண்கள் அமைப்பினர் அம்மாநில முதல்வருக்கு மனு அளித்திருந்தனர்.
அதனடிப்படையில் நீதிபதி ஹேமா தலைமையில் கடந்த 2018ஆம் ஆண்டு மலையாள திரைத்துறையில் பணிபுரியும் பெண்களின் நிலை குறித்து ஆய்வு செய்ய விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. பின்பு விசாரணை நடத்தப்பட்டு கடந்த 2019ஆம் ஆண்டு கேரள முதல்வரிடம் ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த அறிக்கை வெளியிடப்படாமல் இருந்த நிலையில் தகவல் உரிமை ஆணையம் தலையிட்டு அறிக்கையை வெளியிட உத்தரவிட்டது. இந்த உத்தரவிற்கு எதிராக பிரபல மலையாள தயாரிப்பாளர் சஜிமோன் கேரள மனு தாக்கல் செய்தார். இந்த மனு சில நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், அதை கேரளா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து.
இதையடுத்து ஹேமா கமிஷன் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், “நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் மலையாள திரையுலகில் பெருமளவு இருந்து வருகிறது. அதில் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் மீது அதிகளவில் புகார் இருக்கிறது. அதனால் படப்பிடிப்புக்கு செல்லும் நடிகைகளுக்கு பாதுகாப்பான இருப்பிடத்தை தயாரிப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும் படப்பிடிப்பில் மதுபானம், போதைப்பொருட்களுக்குத் தடை விதிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தது.
இந்த அறிக்கை மலையாள திரையுலகில் பேசுபொருளாக மாறிய நிலையில், அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் இது குறித்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கருத்து தெரிவித்துள்ளார். அப்போது அவர் பேசுகையில், “சமுதாயத்தில் நம்முடைய கடமை என்ன? நம் குடும்பத்தில் உள்ள பெண்களை எப்படி நடத்துகிறோம்?... இந்த கேள்விகள் குறித்த விழிப்புணர்வை நம் சமூகத்தில் ஏற்படுத்த வேண்டும். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் வேறுபாடு காட்ட முடியாது, பெண்களை கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்த வேண்டும். பெண்களுக்கு எதிராக சமூகத்தில் நடக்கும் பாதிப்புகளை கட்டுப்படுத்த வேண்டும். சட்டம் அதற்கு உதவியாக இருக்கும். ஆனால் அதற்கு சட்டம் மட்டுமே முழுமையான தீர்வு இல்லை. இந்த விஷயங்களுக்கு எதிராக அரசாங்கமும் செயல்பட வேண்டும். அரசாங்கம் நினைப்பதையும் முழுமையாக செய்ய முடியாது. அதனால் பெண்கள் மீதான அணுகுமுறை மாற்றத்தை குறித்த விழிப்புணர்வு வேண்டும்” என்றார்.