Skip to main content

விஜய்யுடன் நட்பு ரீதியில் அரசியலில் ஈடுபடுவீர்களா? -  கீர்த்தி சுரேஷ் பதில் 

Published on 12/08/2024 | Edited on 12/08/2024
keerthy suresh about political entry

கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் ‘ரகு தாத்தா’. ஹோம்பாலே நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை சுமன் குமார் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்க எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில் மதுரை தனியார் நட்சத்திர ஓட்டலில் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பின்பு பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த கீர்த்தி சுரேஷ், அவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது கீர்த்தி சுரேஷ் பேசுகையில் “இப்படத்தில் நான் நடித்துள்ள கயல்விழி கதாபாத்திரம் பெண்ணியத்திற்காகப் போராடுபவள். 70களில் இருக்கிற ஒரு முற்போக்கான பெண்தான் அவள். பெண்கள் மீது அன்றைக்கும் இன்றைக்கும் நிறைய திணிக்கப்படுகிற விஷயங்கள் உள்ளது. இதை பெரிய விஷயமாகப் படத்தில் காட்டவில்லை. ஆனால் சின்ன சின்ன டயலாக்காக வரும்போது,  ஓ ஆமா-ல இது எல்லாம் பெண்கள் மீது திணிக்கப்படும் விஷயங்கள்தானே? என்று நமக்கு தோன்றும். 

காலம் காலமாக வந்தால் கலாச்சாரம் திடீரென வந்தால் திணிப்பா?  என்று படத்தில் ஒரு டயலாக் வரும். காலம் காலமாக கலாச்சாரம் என்ற பெயரில் திணிக்கப்படுகிற சின்ன சின்ன விஷயங்கள் நிறைய உள்ளது. அந்த மாதிரி சில விஷயங்களை டச் பண்ணி போகிறதுதான் இந்த படம். இதில் எதுவுமே சீரியஸாக இருக்காது, நகைச்சுவை நடையில்தான் இருக்கும். திணிப்பை பற்றி பேசும் போது ஒரு பெண்ணை ஹீரோவாக காட்டுவதில்தான் கிக் உள்ளது என இயக்குநர் சொன்னார். அதனால்தான் ஒரு பெண்ணை முதன்மை கதாபாத்திரமாக வைத்து எடுத்துள்ளோம். இதையே ஒரு ஆண் நடித்திருந்தால் சரியான விதத்தில் சொல்லியிருக்க முடியாது. திணிப்பு என்ற விஷயத்தை இதுவரை யாரும் சொல்லவில்லை. இந்தி திணிப்பை எடுத்துக்காட்டாக வைத்துக்கொண்டு அதை தவிர இன்னும் சில திணிப்புகளை பற்றி பேசியுள்ளோம். படத்தில் எல்லாமே காமெடியாக இருக்கும் ஆனால் கண்டிப்பாகச் சிந்திக்க வைக்கும். பெண்களையும் யோசிக்க வைக்கும், ஆண்களையும் யோசிக்க வைக்கும்.

தமிழ்நாட்டில் மட்டும்தானே மொழியை வைத்து படம் பண்ண முடியும். நம்ம ஊரில் மட்டும்தான் இதைப் பற்றி புரிந்துகொள்வார்கள். இப்படி இயக்குநர் வித்தியாசமாக யோசித்து பண்ணியிருக்கிறார் என்பது எனக்கு ஸ்பெஷலாக தோன்றுகிறது. இந்த படத்தின் ட்ரைலர் வந்தபோது இந்தியைத் தவறாக பேசுகிறீர்கள் என்றார்கள். நாங்கள் இந்தியைத் தவறாக பேசவில்லை இந்தி திணிப்பை பற்றித்தான் பேசுகிறோம். மொழியில் மட்டுமில்லை எந்த விதத்தில் திணிப்பு வந்தாலும் அது தவறானதுதான்” என்றார். மேலும் சினிமா துறையில் பெண்களுக்குப் பாதுகாப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு அவர், “பாதுகாப்பெல்லாம் நல்லாதான் இருக்கிறது. பிரச்சனை என்பது எல்லா துறைகளிலும் இருக்கும். சினிமா துறையில் நீங்கள் சில விஷயங்களை கேள்விப்பட்டதால் இதைப் பற்றி பேசுகிறோம். ஆனால் மற்ற துறையில் நாம் கேள்விப்படாததால் அதை பேசுவது இல்லை” எனப் பதிலளித்தார். 

விஜய்யுடன் நட்பு ரீதியில் அரசியலில் ஈடுபடுவீர்களா? என்ற கேள்விக்கு, “நான் எந்த அரசியலுக்கும் வரவில்லை,  இப்போதைக்கு எதுவும் இல்லை. நடிப்பு மட்டும்தான். எதிர்காலத்தில் நான் அரசியலுக்கு வந்துவிட்டால் அன்றைக்கு நீங்கள் இல்லை எனச் சொன்னீர்கள் என்று சொல்லிவிடக்கூடாது. அதனால் இப்போதைக்கு இல்லை என்று சொன்னேன். அரசியலுக்கு வரவேண்டும் என்ற ஆசை இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்.” என்றார்.

சார்ந்த செய்திகள்