Skip to main content

ஆதிபுருஷ் படத்துக்கு 10,000 டிக்கெட்டுகள் ஃப்ரீ - ஆஃபர் கொடுத்த சர்ச்சை பட தயாரிப்பாளர்

Published on 08/06/2023 | Edited on 08/06/2023

 

the kashmir files producer offer for adipurush ticket

 

பிரபாஸ் நடிப்பில் ஓம் ராவத் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் ‘ஆதிபுருஷ்’. ராமாயணத்தின் ஒரு பகுதியை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்திலும், க்ரீத்தி சனோன் சீதை கதாபாத்திரத்திலும், சையிப் அலிகான் ராவணன் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். 

 

3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே கடும் விமர்சனத்தையும் கிண்டலையும் சந்தித்தது. இப்படத்தை வெளியிடத் தடை விதிக்கக் கோரி விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதையடுத்து இப்படத்தின் ட்ரைலர், முன்பு வெளியான நிலையில் தற்போது இறுதி ட்ரைலர் வெளியாகியுள்ளது. டீசரை போலவே இதற்கும் கிராபிக்ஸ் காட்சிகள் வீடியோ கேமில் உள்ளதாக சமூக வலைத்தளத்தில் கூறி வருகின்றனர். 

 

இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வருகிற 16 ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு பிரபாஸ் அண்மையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்று தரிசனம் மேற்கொண்டார். மேலும் இயக்குநர் ஓம் ராவத் மற்றும் கதாநாயகி க்ரீத்தி சனோன் உள்ளிட்டோரும் திருப்பதி சென்று தரிசனம் செய்த நிலையில், க்ரீத்தி சனோனை வழியனுப்பும்போது இயக்குநர் அவருக்கு முத்தம் கொடுத்ததால் அது சர்ச்சையானது. இதற்கு கோவிலுக்கு முன்பு இப்படி முத்தமிடுவது ஏற்றுக்கொள்ள முடியாது என பாஜக கண்டனம் தெரிவித்தது. 

 

இப்படம் திரையிடும் திரையரங்கில் ஒவ்வொரு காட்சியிலும் ஒரு இருக்கையை ஆஞ்சநேயருக்காக காலியாக விடப் போவதாகப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. இந்நிலையில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத் தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் இப்படத்துக்கு 10,000 டிக்கெட் இலவசமாக வழங்கவுள்ளதாகக் கூறியுள்ளார். 

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஆதிபுருஷ் வாழ்நாளில் ஒருமுறையாவது அனைவரும் கொண்டாட வேண்டிய திரைப்படம். ஸ்ரீ ராமர் மீதுள்ள எனது பக்தியின் காரணமாக, தெலுங்கானா முழுவதும் அரசுப் பள்ளிகள், அனாதை இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட டிக்கெட்டுகளை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்