
ரவி மோகன் கடந்த 2009ஆம் ஆண்டு தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகளான ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது. இந்த சூழலில் ரவி மோகன் ஆர்த்தியை பிரிவதாக கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவித்தார். ஆனால் ஆர்த்தி இது அவர் தன்னிச்சையாக எடுத்த முடிவென்றும் என்னுடைய ஒப்புதல் இல்லாமல் எடுத்த முடிவென்றும் கூறியிருந்தார். பின்னர் ரவி மோகன், ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையில் இரண்டு பேரும் ஆஜராகி விளக்கமளித்தனர். இருப்பினும் இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை. நிலுவையில் இருக்கிறது.
இதனிடையே ரவி மோகனின் விவகாரத்து முடிவிற்கு பெங்களூரூவை சேர்ந்த பாடகி கெனிஷா தான் காரணம் என ஆர்த்தியின் அம்மா சுஜாதா விஜயகுமார் நக்கீரனுக்கு பிரத்யேக பேட்டி கொடுத்தார். அதில் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்களை பகிர்ந்திருந்தார். இந்த தகவலை மறுத்த ரவி மோகன், ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில், “என்னுடைய தனிப்பட்ட விஷயத்தில் யாரையும் இழுக்காதீங்க. தனிப்பட்ட வாழ்க்கையை தனிப்பட்டதாகவே இருக்க விடுங்க. கெனிஷா 600 மேடைகளில் பாடியவர். பல உயிரை காப்பாற்றிய ஒரு ஹீலர். நானும் கெனிஷாவும் எதிர்காலத்தில் ஒரு ஹீலிங் சென்டர் ஆரம்பிக்க இருக்கிறோம். அதன் மூலம் பல பேருக்கு உதவ வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். அதை கெடுக்காதீங்க. அதை யாராலும் கெடுக்கவும் முடியாது” என கூறியிருந்தார்.
பாடகி கெனிஷாவும் ரவி மோகனின் விவாகரத்து முடிவிற்கு நான் காரணமில்லை என விளக்கமளித்திருந்தார். இந்த சூழலில் ரவி மோகனும் கெனிஷாவும் ஒரு திருமண நிகழ்வில் ஜோடியாக கலந்து கொண்டுள்ளனர். வேல்ஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகளின் திருமண நிகழ்வு இன்று சென்னையில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் ரஜினி, கமல் என பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில் ரவி மோகனும் பாடகி கெனிஷாவும் ஒரே கலர் உடையுடன் ஒன்றாக கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இருவரும் ஏற்கனவே வந்த தகவல்களை மறுத்த நிலையில் தற்போது ஒன்றாக பொதுவெளியில் தோன்றியது கோலிவுட்டில் பேசு பொருளாக மாறியுள்ளது.
இது தொடர்பாக ஆர்த்தி தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “நான் ஒரு வருடமாக மௌனம் காத்து வந்தேன். அதனால் நான் பலவீனமாக இருக்கிறேன் என்று பொருள் அல்ல, என் மகன்களுக்கு அமைதி தேவை என்பதால் அப்படி இருந்தேன். ஒவ்வொரு குற்றச்சாட்டையும் ஒவ்வொரு கிசுகிசுக்களையும் நான் பார்த்து கொண்டு வருகிறேன். ஆனால் எதற்கும் நான் பதில் சொல்லவில்லை. அதற்கு என் பக்கம் உண்மை இல்லை என்று அர்த்தம் இல்லை. என் குழந்தைகள் பெற்றோர்களுக்கு இடையிலான அந்த சுமையை சுமக்க வேண்டாம் என்பதால்.
இன்று வெளியான புகைப்படங்களையும், அதற்கான தலைப்புகளையும் பார்த்தபோது, யதார்த்தம் வேறு மாதிரியாக தெரிந்தது. எனது விவாகரத்து வழக்கு இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஆனால், 18 ஆண்டுகளாக நான் அன்பிலும், விசுவாசத்திலும், நம்பிக்கையிலும் துணையாக இருந்தவர் ஒரு காலத்தில் கௌரவிப்பதாக உறுதியளித்த பொறுப்புகளிலிருந்து விலகிச் சென்றுள்ளார். இப்போது நாங்கள் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவதை வங்கியின் மூலம் எதிர்கொள்கிறோம். அதுவும் என்னுடன் அந்த வீட்டைக் கட்டிய மனிதனின் அறிவுறுத்தலின் பேரில். நான் தங்கம் மேல் ஆசைப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறேன். அது எப்போதாவது உண்மையாக இருந்திருந்தால், நான் நீண்ட காலத்திற்கு முன்பே என் தனிப்பட்ட நலன்களைப் பாதுகாத்திருப்பேன். ஆனால் நான் அன்பை தேர்ந்தெடுத்தேன். அது என்னை இங்கு கொண்டு வந்துவிட்டது.
என் குழந்தைகள் 10 மற்றும் 14 வயதுடையவர்கள். அவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அவர்கள் சட்டங்களை புரிந்து கொள்ளும் அளவிற்கு வளரவில்லை. இன்று நான் ஒரு மனைவியாகப் பேசவில்லை. ஒரு தாயாக பேசுகிறேன். இப்போது நான் பேசவில்லை என்றால் இனி எப்போதும் பேச முடியாது. நீங்கள் தங்கத்தை நோக்கி போகலாம். பொது வாழ்க்கையில் உங்களில் அடையாளங்களை மாத்திக் கொள்ளலாம். ஆனால் உண்மையை மீண்டும் திருத்தி எழுத முடியாது. அப்பா என்பது வெறும் பெயர் மட்டும் அல்ல. அது ஒரு பொறுப்பு. ஊடகங்களுக்கு நான் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். என்னை முன்னாள் மனைவி என குறிப்பிட வேண்டாம். விவாகரத்து வழக்கில் இன்னும் தீர்ப்பு வரவில்லை. என் மகன்களுக்காக நான் பேசுவேன். பின் வாங்க மாட்டேன்” என குறிப்பிட்டுள்ளார்.