Skip to main content

“மகிழ்ச்சியில் பழங்குடியின மக்கள்” - கார்த்திக் சுப்புராஜ் நெகிழ்ச்சி

Published on 16/11/2023 | Edited on 16/11/2023

 

karthik subburaj watched jigarthanda 2 with tribe peoples

 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம்  'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'. 2014 ஆம் ஆண்டு வெளியான 'ஜிகர்தண்டா' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள இப்படத்தை கார்த்திகேயன் சந்தானம் மற்றும் கதிரேசன் தயாரித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசைப் பணிகளை மேற்கொண்டுள்ளார். தீபாவளியை முன்னிட்டு கடந்த 10 ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

 

படத்தைப் பார்த்த திரைப் பிரபலங்கள் பலரும் படக்குழுவிற்கு சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஷங்கர், அனிருத், நெல்சன் திலீப்குமார், அருண்ராஜா காமராஜ், அறிவழகன், மாரி செல்வராஜ், விக்னேஷ் சிவன், சிம்பு, புஷ்கர் காயத்ரி, பொன்ராம், சௌந்தர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் ரஜினிகாந்த் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் ஒரு குறிஞ்சி மலர். கார்த்திக் சுப்புராஜின் அற்புதமான படைப்பு, வித்தியாசமான கதை மற்றும் கதைக்களம். சினிமா ரசிகர்கள் இதுவரைக்கும் பார்க்காத புதுமையான காட்சிகள்” எனக் குறிப்பிட்டார். அதோடு படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டினார். 

 

இப்படத்தில் கொடைக்கானல் தாண்டிக்குடி பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் நடித்திருந்த நிலையில், அவர்களுடன் திரையரங்கில் படம் பார்த்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ். இது தொடர்பான புகைப்படங்களைத் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், ‘மகிழ்ச்சியில் பழங்குடியின மக்கள்’ எனப் பதிவிட்டுள்ளார். மேலும் பெரிய திரையில் அவர்களைப் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்