.
ரிஷிகா சர்மா இயக்கத்தில், ஆனந்த் சங்கேஷ்வர் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'விஜயானந்த்'. இப்படம் கர்நாடகா மாநிலத்தின் ஒரு கிராமத்தில் ஒரு சிறு டிரக்கை வைத்து பிஸினஸ் ஆரம்பித்து 4300 வாகனங்களுக்கு சொந்தக்காரராக மாறிய விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை கதை ஆகும். இப்படத்தில் விஜய் சங்கேஸ்வர் கதாபாத்திரத்தில் நிஹால் நடித்துள்ளார். மேலும், அனந்த் நாக், ரவிச்சந்திரன், பாரத் போபண்ணா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா அண்மையில் நடந்தது. அதில் படக்குழுவினரோடு கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். முதல்வர் பசவராஜ் பொம்மை பேசுகையில், "நான் விஜய்யை 1985-ல் சந்தித்தேன். ஒரு சாகசக்காரராகத்தான் அவர் எனக்குத் தெரிந்தார். எப்பொழுதும் கிரியேட்டிவாக யோசிக்கக் கூடியவர். அவர் லோக்சபா எம்.பி. ஆக இருந்தார். அப்பொழுதும் நேரந்தவறாமை தான் அவரது பலம். அவர் எதைத் தொட்டாலும் வெற்றிதான். இந்த சுயசரிதை படம் பல மொழிகளில் வெளியாவது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியடைய எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்றார்.
நடிகர் நிஹால் பேசுகையில், "ஒரு தலைமுறைக்கு நம்பிக்கை தரும் மிகப்பெரும் சாதனையாளராக நான் நடிப்பது பெருமை. நாம் எல்லாம் சாதாரண மனிதர்கள். லீவு நாளில் ஓய்வெடுப்போம். ஆனால், இவர் எத்தனையோ ஆண்டுகள் ஓய்வில்லாமல் உழைத்திருக்கிறார். அவரது சாதனைகள் வாழ்வில் வெற்றி பெற விரும்பும் அனைவருக்கும் பாடம். இதனைத் திரைப்படமாக எடுப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இப்படத்திற்காக அனைவரும் கடுமையாக உழைத்துள்ளனர். அனைத்து மொழிகளிலும் இப்படத்தைக் கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்." என்றார். விஜயானந்த் திரைப்படம் டிசம்பர் டிசம்பர் 9 ஆம் தேதி தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி என இந்தியாவின் பல மொழிகளில் வெளியாகிறது.