
கங்கனா ரணாவத் தற்போது தேஜஸ் மற்றும் எமெர்ஜென்சி படத்தை கைவசம் வைத்துள்ளார். இதில் இந்திய முன்னாள் பிரதமர் மறைந்த இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தின் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு எமெர்ஜென்சி படம் அடுத்த மாதம் 24 ஆம் தேதி வெளியாகவுள்ளதாகப் படக்குழு முன்பு அறிவித்தது. ஆனால் சில காரணங்களால் தள்ளிப் போவதாக சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது. விரைவில் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் போர் விமானங்களை ஓட்டும் பெண் விமானியாக கங்கனா நடித்துள்ள தேஜஸ் படம் வருகிற 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதனால் அதன் ப்ரோமோஷன் பணிகளில் பிசியாக உள்ளார். தசரா பண்டிகையை முன்னிட்டு டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இந்த நிலையில் இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவர் கிலோனை டெல்லியில் சந்தித்துள்ளார். மேலும் இஸ்ரேலுக்கு தனது ஆதரவையும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்களைத் தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ள கங்கனா, "இன்று உலகம் முழுவதும், குறிப்பாக இஸ்ரேலும் இந்தியாவும் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ளன. சிறு குழந்தைகளும் பெண்களும் குறி வைக்கப்படும் விதம் நெஞ்சை பதற வைக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தப் போரில் இஸ்ரேல் வெற்றி பெறும் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது. அவருடன், எனது வரவிருக்கும் படமான தேஜஸ் படம் பற்றி விவாதித்தேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.