இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன்,விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் விக்ரம். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடவுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் பாடலான பத்தல பத்தல பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றாலும் மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் இருப்பதாக கூறி கமல்ஹாசன் மீதும் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினராக சிம்பு கலந்து கொண்டார். இவ்விழாவில் பேசிய கமல்ஹாசன், " என் படத்தின் இசை வெளியீட்டு விழா நான்கு ஆண்டுகள் கழுத்து இப்போதுதான் நடைபெறுகிறது. அதற்கு காரணம் நான் அல்ல நீங்கள் தான். நான் முழுநேர நடிகன் கிடையாது. பாதி நேரம் நடிப்பதால் நிறைய இன்னல்களை சந்தித்திருக்கிறேன். என்னைபார்த்து விழுந்தாலும் எழுந்து விடுவார் என்று கூறுவார்கள். ஆனால் என்னை எழுப்பி விடுவது நீங்கள்தான். நான் முதலில் அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்ன பொழுது, நீங்கள் இப்படி பண்ணலாம்ன்னு கேட்டு டி.ஆர். அழுதார். இந்த முடிவு பலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. புதிய நாகரீகத்தை வளர்க்கவே அரசியலுக்கு வந்துள்ளேன். இந்தியாவின் அழகே பன்முக தன்மைதான். எல்லோரும் கைகோர்த்தால் தான் இந்தியா. இந்தி ஒழிக என்பது என் வேலையில்லை. ஆனால் தமிழ் வாழ்க என சொல்வது எனது கடமை. இந்தி, குஜராத்தி கற்றுக்கொள்ளுங்கள், ஆனால் தாய் மொழி தமிழை கற்றுக் கொள்ளுங்கள்" என்றார்.