
தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கிவந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், தேவரின் மாப்பிள்ளை குடும்பத்திற்கு ரஜினி செய்த உதவி குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...
ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யாவின் முதல் திருமணம் சென்னையில் நடைபெற்றது. நண்பர்கள், கலையுலகைச் சேர்ந்தவர்கள், உறவினர்கள், பெரிய பொறுப்பிலுள்ள காவல்துறை அதிகாரிகள் எனப் பலருக்கும் ரஜினி பத்திரிகை கொடுத்தார். சிலருக்கு நடிகர் ரஜினிகாந்தே நேரடியாகச் சென்று கொடுத்தார். மற்றவர்களுக்கு ஆட்கள் மூலம் கொடுத்தனுப்பினார். எனக்கும் பத்திரிக்கை வந்து சேர்ந்தது. சாண்டோ சின்னப்பத்தேவரின் மாப்பிள்ளை இயக்குநர் தியாகராஜனுக்கு பத்திரிகை வரவில்லை. நமக்கு ஏன் பத்திரிகை வரவில்லை என்று தியாகராஜனுக்கு ஒரே குழப்பம். ரஜினி வீட்டு திருமணம் என்பதால் திரையுலகமே பரபரப்பாக இருந்தது.
தனக்குப் பத்திரிகை வரவில்லை என்ற விஷயத்தை தியாகராஜன் என்னிடம் வந்து கூறினார். அந்த சமயத்தில்தான் தியாகராஜன் வீடு மாறியிருந்தார். அதன் காரணமாக பத்திரிகை வரமால் இருந்திருக்கும் என்று நான் அவரிடம் கூறினேன். பத்திரிகை வரவில்லை என்பதற்காக அவரால் திருமணத்திற்கு செல்லாமலும் இருக்க முடியாது. நாளைக்கே ரஜினி இவரை எங்காவது பார்த்தால், ‘ஏன் திருமணத்திற்கு வரவில்லை. பத்திரிகை கைக்குக் கிடைக்கவில்லை என்றால் வரமாட்டீர்களா... இது உங்க வீடு மாதிரிதானே’ எனக் கேட்பார். தேவர் குடும்பத்தோடு அந்த அளவிற்கு நெருக்கமான உறவு வைத்திருந்தார் ரஜினி.
நான் என் காரில் குடும்பத்துடன் வருகிறேன். நீங்கள் ஒரு காரில் குடும்பத்துடன் வாருங்கள். இருவரும் ஒன்றாகச் செல்வோம். ஆனால், நாம் இருவரும் ஒன்றாக வந்ததுபோல அங்கு காட்டிக்கொள்ளவே கூடாது என்று அவருக்கு யோசனை கூறினேன். அவரும் சரி என்றார். அதேபோல திருமணத்தன்று இருவரும் ஒன்றாகச் சென்று, தனித்தனியாக வந்ததுபோல காட்டிக்கொண்டோம். எள்ளு போட்டால்கூட கீழே விழாத அளவிற்கு திருமண மண்டபத்தில் கடுமையான கூட்ட நெரிசல். ஒருவழியாக மேடையேறி ரஜினிக்கு பின்புறமாக தேவரின் மாப்பிள்ளையும் அவருடைய மனைவியும் நின்றனர். வந்திருந்தவர்களை வரவேற்றுக்கொண்டிருந்த ரஜினி, யதார்த்தமாக பின்புறம் திரும்புகையில் அவர்களைப் பார்த்துவிடுகிறார். தேவர் மகள் கைகூப்பி ‘வணக்கம் அண்ணா...’ என்றார். அவர்களைப் பார்த்ததும் மகிழ்ச்சியின் எல்லைக்குச் சென்றுவிட்டார் ரஜினி. தேவரின் மகள் முன்பு இருந்ததைவிட மிகவும் மெலிந்திருந்தார். அந்த சமயத்தில் அவர்கள் குடும்பம் பொருளாதார நெருக்கடியில் இருந்தது. ‘என்னமா இப்படி ஆகிட்ட...’ என்று தேவர் மகளின் கன்னத்தைப் பிடித்துக்கொண்டு கேட்கையிலேயே ரஜினிக்கு கண்கள் கலங்கிவிட்டன. அதைப் பார்த்து எனக்கு கண்கள் கலங்கிவிட்டன. பின், தேவரின் மாப்பிள்ளையை, ‘நாளைக்கு ஆஃபிசில் வந்து பாருங்கள்’ என்றார் ரஜினி. மணமக்களை வாழ்த்திவிட்டு நாங்கள் அனைவரும் அங்கிருந்து கிளம்பினோம்.
ரஜினி கூறியதுபோல தேவரின் மாப்பிள்ளை மறுநாள் சென்று ரஜினியை சந்தித்தார். அவர்களின் தற்போதைய நிலைமையை அறிந்து அவருக்கு சிறிய தொகையை ரஜினி கொடுத்து உதவினார். பொதுவாக ரஜினி யாருக்கும் அவ்வளவு சீக்கிரம் பிடி கொடுக்கமாட்டார். நாம் ஏதாவது கூறினால், 'அப்படியா... சரி பார்க்கலாம்...' என்றுதான் கூறுவார். ஒருவருக்கு வாக்கு கொடுத்துவிட்டால் அதைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைப்பவர் ரஜினிகாந்த்.