உலகம் முழுவதும் பல லட்சம் பேர் இந்த கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல பல லட்சம் பேர் இந்த நோயின் பாதிப்பால் உயிரிழந்துள்ளானர்.
கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு நாடுகளில் முதலிடத்தில், வல்லரசு நாடான அமெரிக்கா இருப்பது உலகரங்கில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6.44 லட்சமாக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 28 ஆயிரத்து 529 ஆக அதிகரித்துள்ளது. உலகிலேயே கரோனா வைரஸுக்கு அதிகமான உயிரிழப்பைச் சந்தித்த நாடாக அமெரிக்கா மாறியுள்ளது.
இந்நிலையில் இந்த ஆண்டிற்கான சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதைத் தட்டிச் சென்ற வாக்கின் பீனிக்ஸ் வெளியிட்டுள்ள வீடியோவில், “சிறைகளில் கரோனா வைரஸ் பரவினால் நம் அனைவரின் நலனுக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக மாறும். ஒருவர் சிறையில் இருக்கும்போது சமூக விலகலுக்கும், நல்ல சத்தான உணவுக்கும் வழியிருக்காது. சிறையில் இருப்பவர்களுக்கும், சிறைப் பணியாளர்களுக்கும் உடலநலக்குறைவு ஏற்படாமலும், வைரஸ் பரவாமலும் இருக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் தலைவர்கள் செய்ய வேண்டும்.
நியூயார்க் சிறையில் இருப்பவர்களுக்கு கருணை காட்டுமாறு ஆளுநர் ஆண்ட்ரூ க்யூமோவுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். அவருடைய நடவடிக்கையில்தான் பலருடைய வாழ்க்கை இருக்கிறது. சிறையில் ஒருவர் கூட கரோனாவால் சாகக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.