ஜாக்கி ஷெராஃப், சன்னி லியோன், பிரியாமணி, சாரா அர்ஜுன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் கொட்டேஷன் கேங் (Quotation Gang). விவேக் குமார் கண்ணன் இயக்கியிருக்கும் இப்படத்தை காயத்ரி சுரேஷ் - விவேக் குமார் கண்ணன் ஆகியோர் தயாரித்திருக்கின்றனர். இப்படம் நேற்று ( 30.04.2024 ) வெளியாகி கலவையான விமர்சனம் பெற்று வருகிற நிலையில், படத்தில் நடித்த ஜெயபிரகாஷை நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக நேர்காணல் எடுத்தோம். அப்போது அவர் தனது வாழ்கையில் நடந்த பல்வேறு அனுபங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
நேர்காணலின்போது அஜித், ரஜினி, விஜயகாந்த் ஆகியோர் குறித்து ஜெயபிரகாஷ் பேசுகையில், “அஜித் ஒரு ஸ்டாராக இருக்கும்போது அவர் சிந்தனையில் என்ன சங்கடங்கள் இருக்கும் என்று தெரியவில்லை, ஆனால் மிகப்பெரிய பிரச்சனை இருக்கும் என்று மட்டும் தெரியும். அவரின் ஒவ்வொரு படம் ரிலீஸாகும்போதும், அவரை நம்பி பெரிய பிசினஸ் இருந்து வருகிறது. இது அவருக்கு எந்த அளவு அழுத்தத்தை கொடுக்கும் என்று தெரியும். ஆனால் அதை பெரிதாக சிந்தனைக்குள் ஏற்றிக்கொள்ளாமல், அவர் வேலை முழுமையாக என்ஜாய் பண்ணி செய்கிறார். படப்பிடிப்பில் போட்டோ எடுக்க அவரின் ரசிகர்கள் வந்தால், படப்பிடிப்பு முடியும் வரையும் அவர்கள் காத்திருந்தால் கண்டிப்பாக புகைப்படம் எடுத்துக்கொள்வார். 100 பேர் இருந்தாலும் பொறுமையாக போட்டோ எடுக்க போஸ் கொடுப்பார். அஜித்தின் கேரவேனில் மட்டும் 20 பேர் சாப்பிட்டுக் கொண்டிருப்போம். மதியம் சாப்பிடும் நேரம் வந்தால் அவர் எல்லோரையும் சந்திப்பார். தனியா இருக்க ஆசைப்படமாட்டார், ரெஸ்ட் எடுக்கவும் போகமாட்டார். சலிப்பே இல்லாமல் தினமும் சாப்பாட்டு நேரத்தில் இதுபோல நடந்துகொள்வார்.
மதிப்பிற்குரிய ரஜினிகாந்த் என்று தான் நான் அவரை சொல்வேன். அப்படிச் சொல்ல காரணம் அவர் மீதுள்ள மரியாதைதான். இவ்ளோ பெரிய நடிகராக இருக்கும் அவர் தயாரிப்பாளராக நான் வரும்போது, நாற்காலியிலிருந்து எழுந்திரிக்க வேண்டிய அவசியமே இருக்காது. ஆனால். அவர் அதை தொடர்ந்து பண்ணுவார். அதனால் அவர் முன் போவதற்கே கூச்சமாக இருக்கும். கேட்டால் ‘முதலாளிதானே நீங்கள்’ என்பார். இது போன்ற நிறைய விஷயங்கள் அவரிடம் எனக்கு பிடிக்கும். எதுவாக இருந்தாலும் நேராக பேசக்கூடியவர். தன்னடக்கமுள்ளவர், அவர் டிசைனே அப்படித் தான்.
விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது சுயநலமற்றவராக இருந்தார். யாரிடம் அவர் பேசினாலும், பேசக்கூடியவர்கள் சொல்ல வருவதை கேட்டுக்கொள்வதற்கான சிறந்த பொறுமையும் அதை செயல்படுத்தும் திறமையும் அவரிடம் இருந்தது. தனிப்பட்ட முறையில் யாரையும் காயப்படுத்தும் வகையிலும் பேசமாட்டார். ஆனால், தவறு யார் செய்திருந்தாலும் ரொம்ப வெள்ளந்தியாக பளிச்சென்று பேசிவிடுவார். இயல்பாகவே அவர் மீது எல்லோரும் மரியாதை வைத்திருந்தனர். அதற்கு மிகவும் முக்கிய காரணமாக அமைந்தது அவரின் சுயநலமற்ற குணம்தான். சங்கம் சங்கடத்தில் இருந்தபோது கூட அனைவரையும் அழைத்து நிகழ்ச்சிகள் நடத்துவார்.” என்றார்.