ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பிரதர்’. ஸ்கீரின் சீன் மீடியா எண்டர்டெயின்மண்ட் தயாரித்துள்ள இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், நட்ராஜ், பூமிகா, சரண்யா பொன்வண்ணன், வி.டி.வி. கணேஷ், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படம் வருகிற தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று(21.09.2024) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட படக்குவினர்களுடன் இணைந்து ஜெயம் ரவி குடும்பத்திலிருந்து அண்ணன் மோகன் ராஜா மற்றும் அக்கா ரோஜா பங்கேற்றனர். இதில் ஜெயம் ரவி பேசுகையில், “இந்த படம் அக்காவுக்கும் தம்பிக்கும் இடையேயான அழகான ஸ்டோரி. இந்த படத்தின் கதையை ராஜேஸ் என்னிடம் சொல்லும்போது, முழுமையாக காமெடி இல்லாமல் கொஞ்சம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக வேண்டும் என்று கூறினேன். அதற்காக சில மாற்றங்கள் செய்து என்னை மீண்டும் சந்தித்து ஒரு லைன் சொன்னார். அது படத்தின் மீது எனக்கு பெரிய நம்பிக்கை தந்தது. அப்படித்தான் இந்த படத்தை ஆரம்பித்தோம்.
இந்த படத்தின் ‘மக்காமிஷி...’ பாடல் எனக்கும் என்னுடைய ரசிகர்களுக்கும் மறக்க முடியாத பாடலாக இருக்கும் என்று நம்புகிறேன். அந்தளவிற்கு சிறப்பான இசையை ஹாரிஸ் ஜெயராஜ் கொடுத்துள்ளார். அந்த பாடலின் ஒத்திகை நடனத்திற்காக சாண்டி மாஸ்டர் ஸ்டூடியோ கூப்பிட்டிருந்தார். அப்போது என் பையன் ஆரவ்வும் ஸ்டூடியோவுக்கு வந்திருந்தான். அங்கு ஆடும்போது முட்டி மூமண்ட் எனக்கு சரியாக வரவில்லை. உடனே என் பையன் ‘என்ன பா வயசாகிடுச்சா’ என்று கேட்டான். அதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
ஒரு இரண்டு நாள் நேரம் கொடு என்று சொல்லிவிட்டு நன்றாக நடன பயிற்சி பெற்றுவிட்டு வந்தேன். அதன் பிறகு நான் ஆடியதை பார்த்த ஆரவ், உங்களால் முடியும் என்று தம்ஸ் அப் காட்டிவிட்டு போனான். அதேபோல் தான் என்னுடைய முதல் படத்திலிருந்து ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறேன். அது மட்டுமில்லாமல் மீடியாவும் எனக்கு சப்போர்ட் செய்து குழந்தைக்கு சொல்வதுபோல் அறிவுறுத்தியதும் என் வளர்ச்சிக்கு காரணம்” என்றார்.