ஜெயம் ரவி தற்போது ராஜேஷ் இயக்கத்தில் பிரதர், கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை, அறிமுக இயக்குநர் புவனேஷ் அர்ஜூனன் இயக்கத்தில் ஜீனி உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் காதலிக்க நேரமில்லை படம் மொத்த படப்பிடிப்பும் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. ஜீனி படம் படப்பிடிப்பில் இருக்கிறது. பிரதர் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.
பிரதர் படத்தை ஸ்கீரின் சீன் மீடியா எண்டர்டெயின்மண்ட் தயாரித்துள்ள நிலையில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், நட்ராஜ், பூமிகா, சரண்யா பொன்வண்ணன், வி.டி.வி. கணேஷ், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்திலிருந்து ‘மக்காமிஷி...’ என்ற பாடல் கடந்த ஜூலையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வருகிற தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று(21.09.2024) நடைபெற்றது.
இந்த நிலையில் ‘பிரதர்’ படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. டீசரின் தொடக்கத்தில் ராவ் ரமேஷ், ‘மிஸ்டர் கார்த்தி உங்க எய்ம் என்ன’ என்று ஜெயம் ரவியிடம் கேட்க அதற்கு அவர், ‘மூனு வேளையும் ஃபுல்லா சாப்டனும்... 8 மணி நேரம் இடியே இடுச்சாலும் எந்திரிக்க கூடாது, அப்படி தூங்கனும்... மனசுல பட்டத பேசனும், செய்யனும் அவ்ளோதான்’ என்று பதிலளிக்கிறார். அதன் பிறகு இப்படத்தில் நடிப்பவர்களின் கதாபாத்திர பெயர்களை தொடர்சியாக அறிமுகப்படுத்துகின்றனர். இறுதியாக சரண்யா பொன்வண்ணன், வி.டி.வி. கணேஷை பார்த்து ‘உங்க எய்ம் என்னவென்று’ கேட்க அதற்கு அவர், ‘எனக்கு சித் ஸ்ரீராம் போல பாட வேண்டும்’ என நகைச்சுவையாக ஜெயிலர் பட காவாலா பாடலை பாடுகிறார். இதை பார்க்கையில் காதல், காமெடி, ஆக்ஷன் என கமர்ஷியல் அம்சங்கள் அனைத்தும் கலந்து இப்படம் உருவாகியிருப்பது போல் தெரிகிறது.