அஜித் குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. அதன் பின்னர், பல்வேறு மாநிலங்களில் நடைபெற்றது.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் உள்ளிட்ட மூன்று போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. மேலும் அண்மையில், அஜர்பைஜானில் நடந்து வந்த படப்பிடிப்பு நடந்து முடிந்ததாக படக்குழு அறிவித்தது. இந்த நிலையில் அஜர்பைஜானில் இந்திய அயலுறவு பணி அதிகாரி பயணி தரண் என்பவர் அஜித்துடன் மேற்கொண்ட சந்திப்பு குறித்து அனுபவம் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நடிகர் அஜித், அஜர்பைஜானில் நடைபெற்ற விடாமுயற்சி படப்பிடிப்பு நாட்களின்போது ஒரு நாள் வீட்டுக்கு வந்திருந்தார். அவருடன் சக நடிகர்கள் ஆரவ், நிக்கில் வந்திருந்தார்கள். சில அஜர்பைஜான் தமிழ் நண்பர்களும் வந்தார்கள்.
ஒரு கைவிரல்களில் அடங்கிவிடக்கூடிய எண்ணிக்கையில்தான் அஜித்தின் படங்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், ‘அஜித் என்பவர் ஒரு நடிகர்’ என்கிற ஒற்றை விவரிப்பில் அவரை அடக்கிவிடமுடியாது என்பது எங்கள் உரையாடல்களின் சுவாரஸ்யத்தைக் கூட்டியது. குடும்பக் கதைகளும் சேர்ந்துகொள்ள, உணவும் சிரிப்பும் மகிழ்ச்சியுமாய் எல்லோரும் நள்ளிரவு தாண்டியும் பேசிக்கொண்டிருந்தோம். எங்களுடைய ஏதோ ஒரு குடும்ப நிகழ்ச்சி விவரிப்பின்போது அஜித் உட்பட எல்லோரும் குலுங்கிக்குலுங்கிச் சிரித்தோம்” என குறிப்பிட்டுள்ளார்.