Skip to main content

வணிக வளாகத்தில் வன்முறை; ஷாருக்கான் பட பேனர்களை அடித்து நொறுக்கிய கும்பல் கைது

Published on 05/01/2023 | Edited on 05/01/2023

 

Gujarat Bajrang Dal protests against Pathaan movie in Ahmedabad mall

 

ஷாருக்கான், தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகியுள்ள பாலிவுட் படம் 'பதான்'. இப்படத்தின் 'பேஷரம் ரங்' பாடலில் தீபிகா படுகோனே அணிந்திருக்கும் காவி நிற உடை பெரும் சர்ச்சையைக் கிளப்பி கடந்த சில வாரங்களாக சமூக வலைத்தளங்களில் பேசுபொருளானது. காவி நிற உடையை மிகவும் கவர்ச்சியான முறையில் தீபிகா படுகோனே அணிந்திருப்பதாக இந்துத்துவா ஆதரவாளர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

 

பாஜகவை சேர்ந்த மத்தியப்பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, “பாடலில் உள்ள காட்சிகள் மற்றும் உடைகள் மாற்றப்பட வேண்டும். இல்லையென்றால் மத்தியப்பிரதேசத்தில் பதான் படத்தை வெளியிட மாட்டோம்” என எச்சரிக்கை விடுத்திருந்தார். அயோத்தியைச் சேர்ந்த 'அனுமன்காரி' மடத்தைச் சேர்ந்த ராஜு தாஸ், “பதான் திரைப்படம் வெளியிடப்படும் திரையரங்குகளைத் தீயிட்டுக் கொளுத்த வேண்டும்” எனக் கூறியிருந்தார். மத்தியப்பிரதேசத்தில் இந்து அமைப்பைச் சேர்ந்த சிலர் பதான் திரைப்படத்தைத் தடை செய்யக்கோரி ஷாருக்கான் உருவ பொம்மையை எரித்து எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர்.

 

மேலும், பதான் படத்தைப் பார்த்த தணிக்கை குழு, பாடல் காட்சிகளில் சில மாற்றங்களைச் செய்து மீண்டும் சமர்ப்பிக்குமாறு படக்குழுவிடம் கூறியுள்ளது. இதையடுத்து உத்தரப்பிரதேசம் பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் நல அமைப்பு 'பதான்' படத்தின் பாடல், இளைஞர்களின் மனத்தைக் கெடுக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் அந்த ஆபாசக் காட்சிகளை அகற்றச் சொல்லியும் காவல்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளது. 

 

இந்த நிலையில், அஹமதாபாத்தில் ஒரு வணிக வளாகத்தில் பதான் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக படத்தின் பேனர்கள் மற்றும் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தது. அந்த வணிக வளாகத்தில் நுழைந்த பஜ்ரங் தள் குஜராத் அமைப்பினர், அங்கு வைக்கப்பட்டிருந்த பேனர்களை அடித்து நொறுக்கி வன்முறையில் ஈடுபட்டனர். மேலும், பேஷரம் ரங் பாடலில் தீபிகா படுகோனே காவி நிற உடைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் லவ் ஜிகாத்தை ஊக்குவிப்பதால், அதைத் திரையிடக் கூடாது என்றும் பஜ்ரங் தள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே வணிக வளாகத்தில் மக்களை அச்சுறுத்தும் வகையில் பேனர்களை அடித்து நொறுக்கிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். பதான் படம் வருகிற 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்