தமிழ் சினிமாவின் பிதாமகனாகப் போற்றப்பட்ட மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் குறித்து மருது மோகன் என்றவர் 'சிவாஜி கணேசன்' என்ற நூலை எழுதியுள்ளார். இந்த நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று(18.12.2022) நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிவாஜிக்கு நெருக்கமானவர்கள் பலரும் கலந்து கொண்ட நிலையில் இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ் ஆகியோர் முன்னிலையில் இசையமைப்பாளர் இளையராஜா 'சிவாஜி கணேசன்' புத்தகத்தை வெளியிட, சிவாஜி கணேசனின் மகன்களான ராம்குமார், பிரபு ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய பாரதிராஜா, "என் இனிய தமிழ் மக்களே... இந்த உச்சரிப்பைக் கூட சொல்லிக் கொடுத்தவர் என்னுடைய தலைவர் சிவாஜி. நடிகர் திலகம் இல்லையென்றால், ஒரு வசனத்தையோ வார்த்தையையோ எப்படி ஏற்ற வேண்டும் இறக்க வேண்டும் என்பது தெரியாது. அவர்தான் அதைக் கற்றுக் கொடுத்தவர். பாரதிராஜா பேசுகிறான் என்று சொன்னால். அது சிவாஜி போட்ட பிச்சை.
அவரோடு இருந்த அனுபவங்கள் வார்த்தைகளால் சொல்ல முடியாது. சாதாரண முயற்சி இல்லை இந்தப் புத்தகம். உலகத்தில் உள்ள எல்லா தமிழர்களின் வீடுகளிலும் இந்தப் புத்தகம் இருக்க வேண்டும். உலக மகா மிகப் பெரிய நடிகன். தமிழ்நாட்டுடைய சொத்து. அவருக்கான சரியான மரியாதையைக் கொடுக்கவில்லை. கடைசி நேரத்தில் ஏதோ கொஞ்சம் கொடுத்தாங்க. ஆனால் சரியான மரியாதையை யாரும் செய்யவில்லை. அந்த அரசும் செய்யவில்லை.
நான் அரசியல்வாதி கிடையாது. முன்னாடி ஒருநாள் சொன்னேன். எதுக்குனே உங்களுக்கு அரசியல். நீங்க இந்த நாட்டோட பொது சொத்து. அண்ணாந்து மேலே பார்த்தால் சூரியன் தெரிகிறது. நிலா தெரிகிறது. அதேபோல் தொட முடியாத இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். எதுக்கு நீங்க தரையில் நடந்துகிட்டு என்று சொன்னேன். பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் உள்ளிட்ட எந்த விருதும் அவருக்குப் பத்தாது. அவருக்கு ஈடு இணையாக ஒரு பட்டமும் இல்லை. இனிமேல் அவருக்கு பட்டம் கொடுக்கணும் என்று சொன்னால் சிவாஜி என்றுதான் கொடுக்க வேண்டும். அப்படிப்பட்ட அற்புதமான கலைஞருடன் நான் இருந்தது மனதுக்கு பெரும் மகிழ்ச்சி.
நாங்கள் எல்லாம் பாராட்டப்படுகிறோம் என்றால் உழைச்சி கடமைப்பட்டவர்கள். இந்த மண்ணுக்கு கடமைப்பட்டவர்கள். தமிழ்நாட்டிற்கு கடமைப்பட்டவர்கள். உலகம் முழுவதும் நம்மளை அடையாளம் காட்டியது இந்த மண்ணும் மொழியும். இன்னும் பத்து ஜென்மம் இருந்தாலும் சினிமா கலைஞனாகவே பிறக்க வேண்டும். நடிகர் திலகம் என்ன கல்லூரியில் படிச்சாரா... அவருக்கு யாராவது கற்றுக்கொடுத்தார்களா அந்த நவரசத்தை கடவுள் கொடுத்தார். எந்த நவரசத்தை எங்கே தொட்டால் பிரதிபலிக்கும் என்பதைக் கண்டுபிடித்தவர் சிவாஜி. அவர் குழந்தை போல. அம்மா சத்தியமா ஒரு சூதும் அவருக்கு வராது. நடிப்பை தவிர ஒண்ணும் வராது.
சிவாஜியின் சத்தம் கேட்டு, அவரது வசன உச்சரிப்பை பார்த்து, நடிப்பை பார்த்து சென்னைக்கு வந்தவன் நான். நான் தின்னுகிற சோறு நீ போடுகின்ற சோறு. நீ இல்லைனா நான் சினிமாவுல இல்லை. உன்னை கடந்து எந்த நடிகனும் நடிக்க முடியாது. வருகின்ற காலத்திலும் சரி. இருக்கின்ற காலத்திலும் சரி. கமலஹாசனாக இருக்கட்டும் எந்த நடிகராக இருந்தாலும் சரி, உன்னுடைய பதிவு இல்லாமல் பாதிப்பு இல்லாமல் யாரும் இருக்க முடியாது. நான் இங்கே பேசுகிற ஏற்ற இறக்க உச்சரிப்பு கூட நீங்க கற்றுக் கொடுத்ததுதான். சிவாஜி சரஸ்வதியின் புதல்வன். இளையராஜாவும் சரஸ்வதியின் புதல்வன்." என்றார்.