நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சிவாஜி வீட்டின் வாரிசு துஷ்யந்த் உடன் ஒரு சந்திப்பு நடத்தப்பட்டது. நமது கேள்விகளுக்கு பல்வேறு விதமான சுவாரசியமான தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.
தீர்க்கதரிசி படத்தில் தற்போது நடித்திருக்கிறேன். இந்தப் படத்தின் திரைக்கதை மிகவும் வேகமாக பரபரப்பாக இருக்கும். தாத்தா சிவாஜி பண்ணாத ரோலே இல்லை என்று சொல்லலாம். முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார் ஆனவர் அவர். தன்னுடைய மூன்றாவது படத்தில் வில்லனாக நடித்தார். அவர் தன்னை எந்த இடத்திலும் சுருக்கிக் கொள்ளவில்லை. அப்படித்தான் நானும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். தாத்தாவுக்குப் பிறகு சித்தப்பாவும் சினிமாவில் அவருக்கென்று ஒரு இடத்தை அடைந்துள்ளார். அவர்களின் பெயரை நானும் காப்பாற்ற வேண்டும். மக்களின் மனதில் இடம்பிடிக்க வேண்டும்.
சத்யராஜ் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்திருக்கிறார். யூனிட்டில் அனைவருடனும் சகஜமாகப் பழகுவார். அவரிடம் நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. ஒரு ஷாட்டில் என்னை அவர் பார்க்கும்போது "நம்ம பையன்" என்று கூறினார். அதை என்னுடைய பாக்கியமாக நான் நினைக்கிறேன்.
எம்ஜிஆருக்கும் எனக்கும் ஒரே நாளில் தான் பிறந்தநாள். நான் பிறந்த அடுத்த நாள் பேப்பரில் கூட அந்த செய்தி வந்தது. எம்ஜிஆரும் சிவாஜியும் வெளியுலகத்துக்கு தான் போட்டியாளர்கள். உண்மையில் அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள். எம்ஜிஆருக்கு கருவாட்டு குழம்பு மிகவும் பிடிக்கும். என்னுடைய பாட்டிக்கு அவரே தொலைப்பேசியில் அழைத்து கருவாட்டு குழம்பு செய்து கொடுத்து அனுப்பச் சொல்வார்.
கமல் சாரை நான் பெரியப்பா என்றுதான் அழைப்பேன். அவர் எங்கள் வீட்டில் மூத்தவர். எங்கள் குடும்பத்தில் அனைத்து திருமணங்களும் கமல் சார் முன்னிலையில் தான் நடந்தன. ரஜினி சார் எப்போதும் சூப்பர் ஸ்டார். என்னுடைய பாட்டி சிவாஜி தாத்தாவுக்கு ஒரு சிறந்த மனைவியாக இருந்தார். எப்போதும் தாத்தா ஷூட்டிங்கில் இருப்பதால் அனைத்தையும் கவனித்துக்கொண்டது பாட்டி தான். பாட்டி இல்லாத நாட்களில் தாத்தா மிகவும் தவித்துப் போவார்.