பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் அதிரடிக்கும் சத்தத்துக்கும் பெயர் பெற்ற இயக்குனர் ஹரியின் 'சாமி ஸ்கொயர்' நாளை (21-09-2018) வெளியாகிறது.
2003ஆம் ஆண்டு வெளிவந்து பெரு வெற்றி பெற்ற சாமி படத்தின் அடுத்த பகுதி இது. ஹரியின் படங்களில் கார்கள் பறக்கும், ஆக்ஷன் தெறிக்கும். அப்படி அவர் டாடா சுமோக்களை பறக்கவிட்ட காலத்திலிருந்து குவாலிஸ், ஸ்கார்பியோ என மாறி இப்போது ஃபார்ச்சியூனர் காரை பறக்கவிடும் வரை அவர் கூடவே ஓடி ஓடி படம் பிடித்தவர் ஒளிப்பதிவாளர் ப்ரியன். ஹரியின் முதல் படமான 'தமிழ்' தொடங்கி 'சிங்கம் 3' வரை ஹரியுடன் பயணித்தவர். கடந்த ஆண்டு திடீரென்று நெஞ்சு வலியால் மரணமடைந்தார். நாளை வெளியாக உள்ள சாமி ஸ்கொயர் குறித்து ஹரியிடம் பேசிய போது, இடையில் ப்ரியன் நினைவை பகிர்ந்தார்.
"சேரன் இயக்கிய 'தேசிய கீதம்' படத்துக்காக ஒரு பாடல் காட்சியை இயக்குனர் சரண் இயக்கினார். அப்போது நான் சரணிடம் பணியாற்றினேன். டெல்லியில் இந்தியா கேட் பகுதியில் படப்பிடிப்பு நடந்தது. அப்போதுதான் ப்ரியனை முதல் முறையாக சந்தித்தேன். நல்ல மனிதர், அன்பானவர். சில நாட்கள் மட்டுமே ஒன்றாக வேலை செய்தோம். ஆனால், அந்த நட்பு அடுத்து பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக ஒன்றாகப் பயணிக்க அடித்தளமாக அமைந்தது. தமிழ் படத்தில் தொடங்கி, கிட்டத்தட்ட நாங்கள் எப்போவும் ஒன்னாதான் இருந்தோம். ஷூட்டிங்கப்போ மட்டுமில்ல, ஒன்னா டிராவல் பண்ணுனோம், ஒன்னா லொகேஷன் பாக்கப் போனோம். எக்கச்சக்கமா பேசியிருக்கோம். கார்லயும் சரி, ஃப்ளைட்லயும் சரி, என் பக்கத்துலயேதான் உட்கார்ந்திருப்பார். அப்படி இருந்துட்டு, இப்போ அவர் இல்லைன்னு நினைக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு" என்று நெகிழ்ந்தார்.