நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், நக்கீரன் ஸ்டூடியோவுடனான நேர்காணலில் கலந்துகொண்டு பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினார். அந்த நேர்காணலில், இளையராஜாவுடன் ஏற்பட்ட மனக்கசப்பு குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...
"என்னுடைய சின்ன வீடு படம் வரைக்கும் இளையராஜா இசையமைத்தார். ஒவ்வொரு படத்தின்போதும் அடுத்து என்ன படம் என்று கொஞ்சம் முன்னதாகவே சொல்லுங்கள் என்பார். கதை தயார் ஆனவுடன் நானும் அவரிடம் சொல்வேன். அந்த வகையில், அடுத்த படத்தின் கதை தயார் ஆனவுடன் அவர் ஸ்டூடியோவிற்கு சென்றேன். அவர் ரெக்கார்டிங்கில் இருந்ததால் நான் தயார், சார் எப்போது சொன்னாலும் கம்போஸிங் வச்சுக்கலாம் என்று அவர் உதவியாளரிடம் கூறினேன். அவர், சாரை வீட்டில் சென்று சந்தியுங்கள் என்றார். நான் எதற்கு எனக் கேட்க, இல்லை நீங்கள் வீட்டில் சென்று சந்தியுங்கள் என்றார். எப்போதும் ஸ்டூடியோவில்தான் இருப்பார். இங்கு வந்துதான் நான் சந்திப்பேன். திடீரென வீட்டில் சென்று ஏன் சந்திக்க வேண்டும் எனக் கேட்க, இல்லை எல்லாரும் வந்து சந்திக்கிறார்கள் என்றார். வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால் நேரில் சென்று சந்திக்கலாம், இல்லை உடல்நிலை சரியில்லை என்றால் சந்திக்கலாம். தொழில்ரீதியான சந்திப்பிற்கு எதற்கு வீட்டில் சென்று சந்திக்க வேண்டும் எனக் கேட்டு, நான் வந்த விஷயத்தை அவரிடம் கூறுங்கள். அவசியம் என்றால் சென்று சந்திக்கிறேன் எனக் கூறிவிட்டு வந்துவிட்டேன்.
அதன்பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை. அவரிடம் இருந்து எனக்கு எந்த ஃபோன் காலும் வரவில்லை. எனக்கு அது கொஞ்சம் வருத்தமாக இருந்தது. பின், ஆரம்பக்காலங்களில் என்னுடைய நாடகங்களுக்கு இசையமைத்த சுதாகர் என்பவரிடம் இசையை கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். என்னால் இசையமைக்க முடியுமா என்று சிறு தயக்கம் இருந்தது. விஸ்வநாதன் சாரிடம் சில ட்யூன்களை வாசித்து பாடிக்காட்டினேன். அவர் அதைக் கேட்டுவிட்டு நல்லா இருக்கு தம்பி, கண்டிப்பா இந்த டியூன் ஹிட்டாகும் என்றார். அந்த நம்பிக்கையில்தான் இது நம்ம ஆளு படத்திற்கு இசையமைத்தேன். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பு என எல்லாமே பண்ணினார். இப்ப திடீர்னு இசையமைக்கிறார் என்று பெரும் எதிர்பார்ப்போடு பலர் பார்த்தார்கள், அதே நேரத்தில் இவர் எப்படி இசையமைப்பார் என்று சிலர் சந்தேகப் பார்வையிலும் பார்த்தார்கள்" என்றார்.