நாடக மேடைகளில் பிரபலமாகி பின்பு நடிகராக அறிமுகமாகி ரசிகர்களின் நன்மதிப்பை பெற்றவர் டெல்லி கணேஷ். தொடக்கத்தில் ஹீரோவாக நடித்து வந்தாலும் பின்பு குணச்சித்திர கதாபாத்திரம் வில்லன் கதாபாத்திரம் என வித்தியாசம் காட்டினார். ரஜினி, கமல் முதல் இன்றைய தலைமுறை முன்னணி ஹீரோக்கள் வரை பல்வேறு படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பெற்ற இவர், சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று(09.10.2024) மன்னை விட்டு மறைந்தார். திரைத்துறையைத் தாண்டி இந்திய விமானப்படையிலும் 1964 முதல் 1974 வரை பணியாற்றியிருக்கிறார்.
இந்த நிலையில் நக்கீரன் ஸ்டூடியோவிற்காக அவரை முன்பு சந்தித்தபோது, தனது முதல் மேடை குறித்து மனம் திறந்திருந்தார். அவர் பேசியதாவது, “விமானப் படையில் பணிபுரிந்தது எனக்குள் பரந்த நோக்கத்தை உருவாக்கியது. குறுகிய வட்டத்தில் இல்லாமல் தேசிய அளவில் பார்க்க ஆரம்பித்துவிட்டேன். அப்போதெல்லாம் என்னுடைய ஹேர்ஸ்டெயில் பார்த்தால் இந்தி படம் தர்மேந்திரா மாதிரி இருக்கும்.
போரில் அடிப்பட்ட இராணுவ வீரர்கள் விமானத்தில் ஏற்றி டெல்லியில் உள்ள இராணுவ மருத்துவமனையில் அனுமதிப்பார்கள். அவர்களுக்கு பொழுதுபோக்குக்கு எந்த அம்சமும் இருக்காது. ரேடியோ மட்டும்தான் கேட்க முடியும். டி.வி. வராத காலகட்டம் அது. அவர்களின் பொழுது போக்கிறாக அங்கு ஒரு நிகழ்ச்சி நடத்த உருவாக்கினார்கள். அதில் பங்கேற்க என்னையும் கூப்பிட்டார்கள். நான் வரமாட்டேன் என பிடிவாதமாக சொல்லிவிட்டேன். ஆனால் நான் சாப்பிடும் இடங்களில் அதிகம் பேசுவதால் நன்றாக நடிப்பேன் என நினைத்து என்னை அழைத்து சென்று விட்டனர். பின்பு நானும் சென்று நடித்தேன். தமிழில்தான் ஒரு நாடகம் போட்டோம். ஒவ்வொரு வாரமும் நடக்கும். ஒரு வாரம் விமானப் படையினருக்கு, மற்றொரு வாரம் கடற்படையினருக்கு, இன்னொரு வாரம் இராணுவத்துக்கு என ஒதுக்கிவிடுவார்கள். அதில் ஒரு வாரம் விமானப்படையினருக்கு வரும் போது ஒரு நாள் தமிழ், அடுத்த நாள் மலையாளம் என நடத்துவார்கள்.
தமிழ் நிகழ்ச்சியில் வரும்போது பரதநாட்டியம், காவடி ஆட்டம், சிரிப்பு நிகழ்ச்சி என நடக்கும். இதில் சிரிப்பு நிகழ்ச்சியில் நான் நடித்தேன். அதுதான் என்னுடைய முதல் மேடை. அதாவது காயப்பட்ட இராணுவ வீரர்களுக்காக ஏறினேன். அப்போது மேடை ஏறி காமெடி பண்ணினேன். ஆனால் எனக்கு காமெடி பண்ணத் தெரியவில்லை. வசனம் வராமல் முழித்துக் கொண்டு இருந்தேன். நான் முழித்ததை பார்த்த அவர்கள் சிரிக்க ஆரம்பித்துவிட்டனர். அது அவர்களுக்கு காமெடியாக மாறிவிட்டது. அதன் பிறகு தொடர்ச்சியாக நடிக்க ஆரம்பித்தேன். அதனால் என்னுடைய நடிப்புக்கு மூலகாரணம் அடிப்பட்ட இராணுவ வீரர்களுக்கு நடத்தப்பட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிதான்” என்றார்.