தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் ஆகிய சங்க நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர்.
அது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர். அதில் “உச்ச நட்சத்திரங்களின் படங்கள் 8 வாரங்களுக்கு பிறகு ஓடிடி தளங்களில் வெளியிட வேண்டும். சில நடிகர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு சென்று விடுவதால் தயாரிப்பாளர்கள் பெரும் பொருளாதார இழப்பை சந்திக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அதனால் வாங்கிய அட்வான்ஸூக்கு அவர்கள் திரைப்படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு, அடுத்த திரைப்படங்களின் பணிகளுக்குச் செல்ல வேண்டும். நடிகர் தனுஷ் இதுபோல தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் பெற்றிருக்கும் நிலையில், இனி அவரை வைத்து தயாரிக்கும் தயாரிப்பாளர்கள், படம் தொடங்குவதற்கு முன்பாக தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் கலந்தாலோசிக்க வேண்டும்” என பல தீர்மானங்களை நிறைவேற்றி அந்த அறிக்கையில் தயாரிப்பாளர்கள் சங்கம் குறிப்பிட்டிருந்தனர்.
அதைத் தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்கம் ஒரு அறிக்கை வெளியிட்டது அதில் “தனுஷ் மீது தயாரிப்பாளர்கள் சங்கம் இதுவரை எந்த புகாரும் அளிக்கவில்லை. அவர் மீது எந்த புகாரும் இதுவரை நிலுவையில் இல்லை, எங்களிடம் தயாரிப்பாளர்கள் சங்கம் கலந்தாலோசிக்காமல் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது கண்டனத்துக்குரியது. திரைத்துறையின் நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு காண முயற்சி எடுக்கும்போது, தென்னிந்திய நடிகர் சங்கத்தை ஆலோசிக்காமல், ஆயிரக்கணக்கான நடிகர்கள் மற்றும் தொழிலாளர்கள் வாழ்வுரிமையை பறிக்கும் விதமாக, (01.11.2024) அன்று முதல் படப்பிடிப்புகளை முழுமையாக நிறுத்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றிருப்பது பெரும் கண்டனத்துக்குரியது.
இது அனைத்து தரப்பு திரைத் தொழிலாளிகளையும் பாதிக்கும். இந்த தன்னிச்சையான அவசர தீர்மானத்தை உடனடியாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் திரும்ப பெறவேண்டும் என தென்னிந்திய நடிகர் சங்கம் உறுதியாக வலியுறுத்துகிறது. நேற்று (29.07.2024) பத்திரிகை செய்தியில் குறிப்பிட்ட மற்ற தீர்மானங்களையும் மறுபரிசீலனை செய்து, நட்புறவு பாதிக்காமல் சுமூகமான தீர்வு காண தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் முன்வரும் என எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்திருந்தது.
இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில் “திரைத்துறையில் தயாரிப்பாளர்கள் சங்கமும், நடிகர் சங்கமும் நல்ல உடன்பாட்டில் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். இதற்கு முன் நடிகர் மற்றும் தயாரிப்பாளர்கள் சார்ந்த பிரச்சனைகளை எப்போது இருதரப்பினரும் குழுக்கள் ஆரம்பித்து நிர்வாக முடிவுகளை எடுத்து வந்துள்ளது. இப்படி இருக்கும் சமயத்தில் தன்னிச்சையாக தயாரிப்பாளர் சங்கம் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதில் ஒரு புகாரும், வேலை நிறுத்தத்தையும் அவர்களாகவே முடிவெடுத்துள்ளனர், அது மிகவும் வருத்தளிக்கிறது. இதற்கான மேற்கொண்ட தீர்மானங்கள் அடுத்த செயற்குழு கூட்டத்தில் நாங்கள் நிச்சயம் முடிவெடுப்போம்.
தயாரிப்பாளர்கள் சங்கம் இதுவரை கூறியுள்ள புகார்கள் எழுத்து பூர்வமாக எங்களிடம் வரவில்லை. இந்த சமயத்தில் அவர்கள் திடீரென அறிக்கை வெளியிட்டது எங்களுக்கு ஆச்சர்யமாக உள்ளது அதற்கான விளக்கத்தை கேட்டுள்ளோம். அதுமட்டுமில்லாமல் அவர்கள் தொடர்ந்து பணியாற்ற முடியாது என்ற தவறான வார்த்தை பயன்படுத்தியுள்ளனர். படப்பிடிப்பை அவர்கள் நிறுத்த போவதாக கூறுவது எத்தனையோ தொழிலாளர்கள் சம்பந்தப்பட்டது. அதை அவர்கள் எப்படி தன்னிச்சையாக முடிவெடுக்க முடியும்?” என்றும் ரெட் கார்டு மூலம் ஒருவரை வேலை செய்ய முடியாமல் தடுக்க முடியுமா? என்ற கேள்விக்கு அவர் “அது முதலில் லீகலான விஷயம் கிடையாது ” என்றும் தெரிவித்தார்.