தமிழ் திரைப்படங்கள், டிவி தொடர்கள், வெப் தொடர்கள் என சினிமா படப்பிடிப்புகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் தற்போது முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கரோனா பெருந்தொற்றால் பல்வேறு தொழில்துறைகள் முடங்கின. அதில் குறிப்பாக படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டதால் சினிமா திரை பெரிதும் பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது கரோனா தொற்று குறைந்து சினிமா படப்பிடிப்புகள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதற்காக வெளிப்புற படப்பிடிப்பு குழு, தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் அமைப்பில் இருந்து ஆட்களை பணி அமர்த்துகின்றனர்.
இந்நிலையில் திரைப்பட தொழிலாளர்கள் அமைப்புகள்(பெப்சி) புதிதாக சேரும் நபர்களிடம் 3 லட்சம் செலுத்தி உறுப்பினராக சேர வேண்டும் என்று கூறுவதாக புகார் எழுந்துள்ளது. இதனை கண்டித்து வெளிப்புற படப்பிடிப்பு குழு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் ஜூன் 1 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது . இதனால் பெரிய நடிகர்கள் படம் முதல் டிவி தொடர்களின் படப்பிடிப்புகள் வரை அனைத்தும் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.