மேயாத மான் படத்திற்கு பிறகு இயக்குநர் ரத்னகுமார் அமலா பாலை வைத்து இயக்கும் படம் ‘ஆடை’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு, சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று, முடிவடைந்தது. தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது படக்குழு.
படம் நேரடி ஒலிக்கலவை என்பதால், டப்பிங் பணிகள் கிடையாது. இதனால், இறுதிக்கட்டப் பணிகள் சீக்கிரமாக முடிவடைந்ததால், தணிக்கைக்கு விண்ணப்பித்தனர். படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள், ‘ஏ’ சான்றிதழ் வழங்கி படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.
பெண் ஒருவர் ஆடையில்லாமல், ஒரு இடத்தில் மாட்டிக் கொள்கிறார். அங்கிருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்ற பின்னணியில் இந்தக் கதை அமைக்கப்பட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகியது. ஆனால், படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினரோ, அதிகமான ஆபாசம் இருப்பதால் ஏ சான்றிதழ் மட்டுமே தர முடியும் என்று தெரிவித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘ஏ’ சான்றிதழ் என்பதால் குடும்பத்தோடு படம் பார்ப்பவர்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைவது மட்டுமின்றி, தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையும் குறைந்த விலைக்கே போகும் என்ற கவலையில் உள்ளது படக்குழு.