பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி மாலை வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கிய நிலையில், கொலை வழக்கில் ஏகப்பட்ட திருப்பங்கள் நடந்து வருகிறது. முதலில் 11 பேரை கைது செய்தனர் போலீஸார். பின்பு சில நாட்கள் கழித்து போலீஸாரின் பிடியிலிருந்து தப்பிய ஓடியதாக கூறி திருவேங்கடம் என்பவரை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர் காவல் துறையினர்.
இந்த வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி, பா.ஜ.க பிரமுகர் அஞ்சலை உட்பட 21 பேர் இதுவரை கைது செய்யப்பட்டனர். மேலும், தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி வேண்டி கடந்த மாதம் நினைவேந்தல் பேரணி நடத்தினார். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் என்பதை கண்டிக்கும் விதமாக பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆனந்தன், ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி உள்ளிட்ட 1500 பேர் பங்கேற்றனர். இவர்களுடன் பா.ரஞ்சித் மற்றும் நடிகர் தீனா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில், அனுமதி இன்றி போராட்டம் நடத்தியதாக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆனந்தன், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, இயக்குநர்கள் பா.ரஞ்சித் உள்ளிட்ட ஆயிரத்து 500 பேர் மீது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.