எடிட்டர் கோபி கிருஷ்ணாவின் 'கட்டிங் ஒட்டிங்' ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள படம் 'நாயே பேயே'. நடன இயக்குனர் தினேஷ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா நடிக்க, இவர்களுடன் ஆடுகளம் முருகதாஸ், ரோகேஷ், கிருஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இயக்குநர் பாக்யராஜ் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் இயக்குநர் பாக்யராஜ் பேசுகையில், " 'நாயே பேயே' என்ற சின்னவீடு கட்டியதாக இயக்குநர் சக்திவாசன் கூறினார். ரொம்ப சிரமப்பட்டுச் சிறப்பான முறையில் கட்டிய இயக்குநருக்கு வாழ்த்துகள். அவருக்கு அஸ்திவாரமாய் இருந்த எடிட்டர் கோபி கிருஷ்ணாவுக்கும் வாழ்த்துகள். சின்ன வீட்டில் புகுந்துவிளையாடி இருக்கும் டான்ஸ் மாஸ்டர் தினேஷுக்கு வாழ்த்துகள். இந்தப் படத்தில் சிறப்பான விஷயம் என்ன என்றால் எடிட்டர் கோபி கிருஷ்ணா தயாரிப்பாளராகியுள்ளார். மிகவும் சந்தோஷம். அதைவிட சந்தோஷம் என்னவென்றால் ஒரு புது டைரக்டருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அதே போல் தினேஷ் மாஸ்டர். அவர் 'ஒரு குப்பைக் கதை' செய்த போதே நான் பாராட்டினேன்.
இந்தப் படத்திலும் டிரெய்லரில் நல்ல முகபாவனைகள் காட்டி நடித்திருக்கிறார். இங்கு பேசும்போது படக்குழு அடிக்கடி முந்தானை முடிச்சு பார்த்ததாகக் கூறினார்கள். நானே இப்போது 'முந்தானை முடிச்சு' படத்தை மறுபடியும் மறுபடியும் போட்டுப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஏனென்றால், மீண்டும் 'முந்தானை முடிச்சு' ரீமேக் ஆகிறது. அந்த காட்சிகளை அப்படியே வைக்க முடியாது அல்லவா? எனவே, எடுத்த கதைக்கு மீண்டும் காட்சிகள் எழுதுவது சிரமமாக இருக்கிறது. திரைக்கதை எழுதுவது இப்போது சிரமமாகி விட்டது. அந்த காலத்தில் தவளை வைத்து எடுத்த காமெடி காட்சிகள் பழசாகிவிட்டது. இந்த காலத்துக்கு செட்டாகாது. இந்த காலத்துக்கு ஏற்றபடி காமெடி காட்சிகள் எடுக்க நிறைய யோசிக்க வேண்டியிருக்கிறது. புதிய புதிய காட்சிகள் யோசித்து திரைக்கதை அமைத்து வருகிறோம். அதனால்தான் சொன்னேன் இப்போது திரைக்கதை எழுதுவது கடினமாகிவிட்டது. நாயே பேயே படம் வெற்றி அடைய வாழ்த்துகள்" எனக் கூறினார்.