ஹாரர் திரில்லர் படமாக வெறும் 10 நாட்களில் உருவாகியிருக்கும் ‘டோலா’ படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அவ்விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் கே.பாக்யராஜ் படம் குறித்து பேசியபோது....
''தயாரிப்பாளர்கள் எப்படி நம்மை பூ போல் பார்த்துக்கொள்கிறார்களோ, அதுபோல் நாமும் அவர்களை பூ போல் பார்த்துக்கொள்ளவேண்டும். நான் 'தூறல் நின்னு போச்சி' படம் எடுத்தேன். அந்த படத்தின் தயாரிப்பாளர் சி.எம் நஞ்சப்பன் என் ஊர்க்காரர். அவருடைய தாய் 75 வயதிலும் ஹோட்டல் வைத்து சம்பாதித்து கொண்டிருந்தார். இவரோ அவர் அம்மா சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் நாடகம் போடுவதில் செலவு செய்து நஷ்டம் அடைந்தார். பின் சென்னைக்கு வந்து ஒரு படம் எடுத்து அதிலும் நஷ்டம் அடைந்து பின்னர் கோயம்பத்தூரிலேயே மீண்டும் செட்டில் ஆனார். பின்னர் நான் சினிமாவிற்குள் நுழைந்து படங்கள் இயக்க ஆரம்பித்த காலத்தில் அவர் அம்மா என்னை பார்க்கும்போதெல்லாம், என் மகன் மிகவும் கஷ்டப்படுகிறான் அவனுக்கு உதவி செய் என கேட்டுக்கொண்டே இருப்பார். அவருக்காக நான் நஞ்சப்பனுக்கு 'தூறல் நின்னு போச்சி' செய்தேன்.
நஞ்சப்பன் ஹோட்டல்காரர் என்பதால் நாங்கள் பசியை மறந்து தீவிர கதைவிவாதம் நடத்திக்கொண்டிருக்கும் வேளையில் கூட ரூமிற்கு வெளியே நின்றுகொண்டு என் உதவியாளர்களிடம் சைகை மூலம் என்ன உணவு வேண்டும் என கேட்டு ஆர்டர் எடுத்துக்கொண்டிருப்பார். அந்த அளவு அவர் எங்களை பூ போல் பார்த்துக்கொள்வார். எப்படி தயாரிப்பாளர்கள் நம்மை பூ போல் பார்த்துக்கொள்கிறார்களோ அதேபோல் நாமும் நல்ல படம் எடுத்து அவர்களை ரிஸ்க் இல்லாமல் பூ போல் பார்த்துக்கொள்ளவேண்டும். டோலா’ படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களைப் பார்க்கும்போது ஒரு சிலரைத் தவிர மற்ற அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் புதுமுகம் தான். காட்சி அமைப்புகளைப் பார்க்கும்போது ஒளிப்பதிவாளருக்கு இது முதல் படம் மாதிரி தெரியவில்லை. கதாநாயகியும் சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். எப்போதும் நல்ல கதையம்சம் கொண்ட படம் வெற்றிபெறும். இப்படமும் வெற்றிபெற வாழ்த்துக்கள்'' என்றார்.