
கடந்த சில ஆண்டுகளாக எந்தப் படத்தையும் தயாரிக்காமல் இருந்து வந்த முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏ.வி.எம் நிறுவனம், தற்போது வெப் சீரிஸ் துறையில் கால் பதித்து கோடம்பாக்க வட்டாரத்தில் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளது. 'ஈரம்', 'வல்லினம்' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் அறிவழகன், இந்த வெப் சீரிஸை இயக்க உள்ளார். "தமிழ் ஸ்டாக்கர்ஸ்" எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரானது தமிழ்த் திரைப்பட உலகில் சமீப காலமாக நடக்கும் திரைப்படத் திருட்டுக் கும்பலை மையமாகக் கொண்டு உருவாகவுள்ளது.
திரில்லர் வகையிலான இத்தொடர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில், சோனி லிவ் என்ற ஓடிடி தளத்தில் பிரத்தியேகமாக வெளியாகவுள்ளது. இது குறித்து ஏ.வி.எம் நிறுவனத்தைச் சேர்ந்த அருணா குகன் மற்றும் அபர்ணா குகன் ஷாம் கூறுகையில், " 'தமிழ் ஸ்டாக்கர்ஸ்'-ல் படைப்பு திருட்டுக்கு எதிரான தமிழ்த் திரைத்துறையின் இடைவிடாத போரின் கேள்விப்படாத அம்சங்களையும், அதை எதிர்கொள்வதற்கான வழிகள் பற்றியும் சொல்லியிருக்கிறோம். 'SONY LIV' உடன் இணைந்து பார்வையாளர்களிடம் இதைக் கொண்டு சேர்ப்பதில் நாங்கள் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளோம். இந்தப் படைப்பு ஒரு தலைப்புச் செய்திக்குப் பொருத்தமான புதிரான கதை அம்சத்துடன் விளங்குகிறது. அறிவழகன் போன்ற தொலைநோக்குப் பார்வை கொண்ட இயக்குநருடன் இணைந்து வெற்றியை உறுதிசெய்வோம் என்று நம்புகிறோம்" எனக் கூறினார்கள்.