சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் தம்பி ராமையா கதை நாயகனாக நடித்திருக்கும் படம் ‘ராஜா கிளி’. நடிப்பதோடு மட்டுமல்லாமல் கதை, வசனம், பாடல்கள், இசையமைப்பு என மற்ற பணிகளையும் மேற்கொண்டுள்ளார் தம்பி ராமையா. இவரது மகனான நடிகர் உமாபதி ராமையா இப்படத்தை இயக்கியுள்ளார். இதன் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தில் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்க ஸ்வேதா, சுபா, பிரவீன், முபாஸிர், இயக்குநர் மூர்த்தி உள்ளிட்ட பலரும் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் வரும் டிசம்பர் 13ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் மற்றும் அர்ஜுன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் அர்ஜுன் பேசுகையில், “இந்த படத்தில் நான் நடிக்கவில்லை என்றாலும் இந்த படம் எனக்கு ஒரு ஸ்பெஷல் தான். என்னுடைய குடும்ப படம் போல தான் இருக்கிறது. ஏனென்றால் என் சம்பந்தி ஹீரோ.. மாப்பிள்ளை டைரக்டர்.. இந்தப் படத்தில் நான் கூட இதுவரை நடித்திராத அளவிற்கு ஒரு ரொமாண்டிக் பாடலில் தம்பி ராமையா நடித்து இருப்பதாக சொன்னார்கள். இது சரியில்ல சார்” என மேடையில் அமர்ந்திருந்த தம்பி ராமையாவை பார்த்து கலாய்த்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “நானும் எனது மாப்பிள்ளையும் ஒன்றாக இருக்கும் முதல் மேடை இது. இனி நிறைய பார்க்கப் போகிறீர்கள்.. எங்கள் கூட்டணியில் பல படங்களை உருவாக்கப் போகிறோம். சொல்லக்கூடாது செய்து காட்ட வேண்டும். சுரேஷ் காமாட்சி நல்ல நடிகர்களை தேர்வு செய்து நடிக்க வைப்பதாக சொல்கிறார்கள். ஆனால் இப்போது வரை என்னை அவர் கூப்பிடவே இல்லை. அவருக்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என வாழ்த்துகிறேன்” என்று கூறினார்.