Skip to main content

“நமது தாயகத்தை யார் விற்றார்கள்...” - ஆண்ட்ரியா பகிர்ந்த கவிதை

Published on 10/05/2025 | Edited on 10/05/2025
andrea about india pakistan fights

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் கடந்த மாதம் 22ஆம் தேதி பயங்கரவாதக் கும்பல் சுற்றுலாப் பயணிகள் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்தது. இதற்கு பதில் தாக்குதல் தரும் விதமாக பாகிஸ்தான் இந்தியாவில் வான்வழித் தாக்குதல் நடத்த முயற்சித்தது. ஆனால் அதை அனைத்தையும் இந்தியா முறியடித்தது. இதனால் தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையே போர் பதற்ற சூழ்நிலை நீடித்து வருகிறது. 

இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்தது தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள், சோசியல் மீடியா பிரபலங்கள், மக்கள் என பலரும் இந்திய ராணுவத்துக்கு பாராட்டு தெரிவித்து பதிவிட்டனர். அதே வேளையில் போர் பொதுமக்களுக்கு நல்லதல்ல, அதை யாரும் ஆதரிக்க வேண்டாம் எனவும் சமூக வலைதளங்களில் பலர் கருத்து கூறி வருகின்றனர். இதனிடையே நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா, தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் போருக்கு எதிராக இருக்கும் வகையில் ஒரு கவிதையை பகிர்ந்துள்ளார்.

அவர் பகிர்ந்த பதிவில், “போர் முடிவுக்கு வரும். தலைவர்கள் கைகுலுக்கிக் கொள்வார்கள். அந்த மூதாட்டி தனது உயிர் தியாகம் செய்த மகனுக்காக காத்துக் கொண்டிருப்பார். அந்தப் பெண் தன் அன்பான கணவருக்காகக் காத்திருப்பார், அந்தக் குழந்தைகள் தங்கள் ஹீரோ தந்தைக்காகக் காத்திருப்பார்கள். நமது தாயகத்தை யார் விற்றார்கள் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் யார் விலை கொடுத்தார்கள் என்று பார்த்தேன்” என பாலஸ்தீன கவிஞர் மற்றும் எழுத்தாளர் மஹ்மூத் தர்விஷ் எழுதிய கவிதையை அவர் பகிர்ந்திருந்துள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. ஏற்கனவே பஹல்காம் தாக்குதல் நடந்த போது பாதிக்கப்பட்ட மக்களின் நிலை குறித்து வருத்தப்படுவதாகவும் வெறுப்புக்கு இங்கு இடமில்லை என்றும் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்