திரையுலகினர் பலரும் நேற்று அன்னையர் தினத்தை முன்னிட்டு வாழ்த்துகள் தெரிவித்து வந்த நிலையில் இசையமைப்பாளர் அம்ரீஷ் தனது அன்னைக்கு வாழ்த்துகள் கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்...
"கரோனா ஊரடங்கில் அனைவரும் வீட்டில் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். பாதுகாப்புடன் வீட்டிலேயே இருங்கள். கரோனாவில் இருந்து கண்டிப்பாக அனைவரும் கூடிய விரைவில் வெளியே வந்துவிடுவோம் என்று நானும் நம்புகிறேன். நீங்களும் நம்பிக்கையோடு இருங்கள். அதேசமயம், இன்று அன்னையர் தினம். ஆகையால், என் அம்மாவிற்கு வாழ்த்துகள் கூறுவதற்கு விரும்புகிறேன். என் அம்மா நடிகை ஜெயசித்ரா அவர்களைப் பற்றி ஒரே வரியில் கூறவேண்டுமென்றால், 'அவர் இல்லையென்றால் நான் இல்லை'. அவரால் தான் நான் இன்று இந்த நிலைமைக்கு வந்துள்ளேன். மிக்க நன்றி அம்மா! என்னை ஆளாக்க மிகுந்த முயற்சி எடுத்திருக்கிறீர்கள். அதற்காக நான் சாகும்வரை கடமைப்பட்டுள்ளேன். அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் மீண்டும் உங்களுக்கே மகனாகப் பிறக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். ஒருவேளை அது நடக்காமல் போனால், நீங்கள் எனக்கு மகளாகவோ, மகனாகவோ பிறக்க வேண்டுமென்று எல்லாம்வல்ல இறைவனை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். அனைத்து அம்மாக்களுக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்" எனக் கூறியுள்ளார்.