Skip to main content

முன்பு அருண் விஜய் மீது மரியாதை இருந்தது; இப்போது அன்பும் பல மடங்கு வந்துவிட்டது” - அம்மு அபிராமி கூறும் காரணம்

Published on 04/07/2022 | Edited on 04/07/2022

 

Ammu Abhirami

 

ஹரி இயக்கத்தில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, ராதிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 1ஆம் தேதி வெளியான 'யானை' திரைப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக குடும்ப ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள அம்மு அபிராமியை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் யானை பட அனுபவம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...  

 

”யானை படத்தில் நடித்தது மிகச்சிறப்பான அனுபவமாக இருந்தது. இவ்வளவு பெரிய நடிகர்கள் குழு நடித்துள்ள ஒரு படத்தில் சிறிய பகுதியாக நானும் இருந்ததே எனக்கு மிகப்பெரிய விஷயம். படத்தில் ரொம்பவும் முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் நடித்திருக்கிறேன். ஹரி சார் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது முதலில் பயமாக இருந்தது. ஆனால், ஷூட்டிங் ஸ்பாட்டில் மற்றவர்களை அவர் நடத்தும் விதத்தை பார்த்தபோது ஆச்சர்யமாக இருந்தது. குறிப்பாக பெண்களை ரொம்பவும் தன்மையாக நடத்துவார். 

 

முதல் காட்சியிலேயே அவருடைய இயக்கத்தில் நடிப்பதை வசதியாக உணர ஆரம்பித்தேன். அவரைப் பொறுத்தவரை சரியான நேரத்திற்கு ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வரவேண்டும் என்று நினைப்பார். நான் அந்த விஷயத்தில் சரியாக இருப்பதால் அவர் படத்தில் நடிப்பதில் எனக்கு எந்த சிக்கலும் இல்லை. அவருக்கு என்ன வேணும் என்பதை ஹரி சார் தெளிவாக சொல்லிவிடுவார். அவர் சொல்வதைக் கேட்டால் நாம் கண்ணை மூடிக்கொண்டு நடித்துவிடலாம். அந்த அளவிற்கு இன்புட்ஸ் கொடுப்பார். 

 

படத்தில் ஃபைட் சீன்ஸ் பார்க்கும்போது ரொம்பவும் பயமாக இருந்தது. நல்லவேளை நமக்கு எந்த சீனும் அப்படி இல்லை என்று நினைத்தேன். எப்போது அடிபடும் என்றே தெரியாது. அவ்வளவு உழைப்பை போட்டு அவர்கள் நடிப்பது பெரிய விஷயம். ஸ்டண்ட் மாஸ்டர்ஸ், ஸ்டண்ட் கலைஞர்களை நிச்சயம் பாராட்ட வேண்டும். 

 

படத்தில் அருண் விஜய்யை ரவி அப்பா என்றுதான் அழைப்பேன். மிகப்பெரிய குடும்பப் பின்னணி கொண்ட நடிகர் மற்றும் தமிழ் சினிமாவில் முக்கியமான ஸ்டாராக அருண் விஜய் இருக்கிறார். ஆனால், அதையெல்லாம் அவர் வெளிக்காட்டிக்கொண்டதே இல்லை. தனிப்பட்ட முறையிலும் அவரை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். ராட்சசன் படம் வெளியானதும் ரொம்ப நல்லா நடிச்சிருக்க என்று எனக்கு மெசேஜ் பண்ண ஃபர்ஸ்ட் செலிபிரிட்டி அருண் விஜய்தான். அப்போது இருந்தே அவர் மீது எனக்கு பெரிய மரியாதை இருந்தது. அவருடன் இணைந்து நடித்த பிறகு பல மடங்கு அன்பும் வந்துவிட்டது. 

 

பிரியா பவானி சங்கருடன் எனக்கு நிறைய சீன்ஸ் இருந்தது. அவருடன் பழகுவது நம் குடும்பத்தில் உள்ள அக்காவிடம் பழகுவதுபோல இருக்கும். ராதிகா மேம் உடன் இணைந்து நடித்ததெல்லாம் எனக்கு கிடைத்த பெரிய பாக்கியம். 

 

ஹரி சாரின் மசாலா கலந்த ஃபேமிலி ட்ராமா படங்களை ரொம்ப நாட்களாக மிஸ் செய்தவர்களுக்கு நல்ல ட்ரீட்டாக யானை படம் அமைந்துள்ளது. படத்தில் கருத்து சொல்லப்பட்டிருந்தாலும் வலிந்து திணிக்காமல் கதைபோன போக்கில் சொல்லப்பட்டுள்ளது. குடும்பத்துடன் முகம் சுழிக்காமல் பார்க்கக்கூடிய படமாக யானை இருக்கும். திரையரங்கில் சென்று பாருங்கள், நிச்சயம் உங்களுக்கு படம் பிடிக்கும்”.

 

 

சார்ந்த செய்திகள்