விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டம் கீழதிருத்தங்கல் கிராமத்தில் உள்ள செங்கமலப்பட்டியில் தனியார் பட்டாசு தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்தப் பட்டாசு ஆலையில் பல்வேறு ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த ஆலையில் ஆண் மற்றும் பெண் எனப் பலரும் பணிபுரிந்து வந்தனர். இத்தகைய சூழலில் தான் அதிகப்படியான வெப்பத்தால் பட்டாசு தயாரிக்கும் மூலப் பொருட்கள் ஒன்றுடன் ஒன்று உராய்வு ஏற்பட்டு ஆலையில் நேற்று முன்தினம்(09.05.2024) பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்த வெடி விபத்தில் சிக்கி ஒரு பெண் உட்பட 10 பேர் பலியாகி உள்ளனர். மேலும் சிலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, தமிழ்நாட்டில் உள்ள பட்டாசு ஆலைகளின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தி உள்ளது.
இந்த நிலையில், சிவகாசியில் மேலும் ஒரு பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. சிவகாசி அருகே நாரணாபுரம் பகுதியில் ராஜாராம் என்பவருக்கு சொந்தமாக பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வந்தது. இந்நிலையில், இந்த பட்டாசு ஆலையில், பட்டாசு தயாரிப்பதற்கான ரசாயன மூலப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் திடீரென தீ பற்றி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த அறையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 அறைகள் தரைமட்டமாகின. காலை நேரத்தில் விபத்து ஏற்பட்ட நிலையில், தொழிலாளர்கள் யாரும் பணிக்கு வராததால் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இதற்கு முன்பாகவே தமிழகத்தில் குறிப்பாக விருதுநகர் சிவகாசி பகுதிகளில் பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் வெடி விபத்துகளும் அதனைத் தொடர்ந்து ஏற்படும் உயிரிழப்பு சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், மேலும் ஒரு பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் இந்த மாதத்தில் மட்டும் 5வது முறையாகப் பட்டாசு ஆலையில் வெடி விபத்து நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.