Skip to main content

“இறந்தவர்களுக்கெல்லாம் ரூ.10 லட்சம் என்பது ஏற்புடையதல்ல” - அமீர்

Published on 10/07/2024 | Edited on 10/07/2024
Ameer spoke about kallakurichi issue

‘யோலோ’ படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் அமீர் கலந்து கொண்டு பேசினார். அதன் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “போதை உலகம் முழுவதும் வியாபித்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் தான் இருக்கிறது என்று சொல்வது ஒரு வகையான அரசியல். குஜராத் போன்ற வடமாநிலங்களில் துறைமுகத்தில் எல்லாம் போதை வஸ்துக்கள் டன் கணக்கில் இறக்குமதியாகிறது. அந்த வகையில், தமிழகத்தை பொறுத்தவரை ஓரளவுக்கு சட்ட ஒழுங்கு கட்டுப்பாட்டில் உள்ளதாக தான் நாம் பார்க்கிறோம். 

நடந்துகொண்டிருந்த அசம்பாவிதங்கள் தவிர்த்திருக்க வேண்டியது. அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. கள்ளச்சாராய மரணம், பட்டியலின தலைவர் மரணம் ஆகியவை தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதனாலேயே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது என சொல்ல முடியாது. அதற்கு உரிய நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் நாம் விமர்சனங்கள் செய்யலாம். 

பட்டியலின தலைவர்கள் பாதுகாக்கப்படவில்லை, மற்ற தலைவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள் என்று சொல்வதை ஏற்க முடியாது. இதற்குள் அரசியல் இருக்கிறது. எல்லோருக்கும் பாதுகாப்பு வேண்டும். அதில், ஆம்ஸ்ட்ராங் தான் சார்ந்திருக்க சமூகத்தால் போற்றப்படுகிற நபராக இருந்திருக்கிறார். முக்கிய தலைவராக இருந்திருக்கிறார். அவர் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. நடந்தது ஒரு துயரச்சம்பவம் தான். ஆனால், அதற்காக பட்டியலின மக்களை தனியாக பிரிக்கிற அரசியலை நான் செய்ய விரும்பவில்லை. 

கள்ளச்சாராய மரணத்தில் உடனடியாக ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்டதில் எனக்கும் உடன்பாடில்லை. தாய், தகப்பனை இழந்த குழந்தைகளை அரசு தன்வசப்படுத்துவது நியாயமானது. அவர்களின் எதிர்காலத்திற்குப் பொறுப்பேற்றுக் கொள்வது அரசின் கடமையாகப் பார்க்கிறேன். ஆனால், இறந்தவர்களுக்கெல்லாம் ரூ.10 லட்சம் என்பது ஏற்புடையதல்ல. அதே போல், அரசியல் தலைவர்கள் எல்லாம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை நேரில் சென்று பார்த்ததெல்லாம் சரியான அரசியலாக எனக்குத் தோன்றவில்லை” என்று பேசினார். 

சார்ந்த செய்திகள்