விஜய் நடிப்பில் 40க்கும் மேற்பட்ட நாடுகளில் நேற்று (05.09.2024) வெளியான திரைப்படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் புதிய முயற்சியாக மறைந்த பவதாரிணி குரலை ‘சின்ன சின்ன கண்கள்...’ பாடலிலும் விஜயகாந்த் கேமியோ ரோலில் நடித்திருப்பது போல் ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மூலம் இப்படத்தில் பயன்படுத்தியிருந்தனர்.
இப்படம் இரண்டாவது நாளாக திரையரங்கில் ஓடி நல்ல விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், வசூல் ரீதியாக உலக அளவில் முதல் நாள் மட்டும் ரூ.126 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இது தொடர்பாக அர்ச்சனா கல்பாத்தி, “பாக்ஸ் ஆபிஸில் கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” என்று தெரிவித்திருந்தார். இதற்கு பதில் தெரிக்கும் விதமாக வெங்கட் பிரபு, “தளபதி இப்படத்தை பாக்ஸ் ஆபிஸில் எடுத்து செல்கிறார்” என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் ‘தி கோட்’ படத்தை பாராட்டியுள்ளார். இது தொடர்பான அவரின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “தியேட்டரில் பார்க்க வொர்த்தான படம் தி கோட். இரண்டு கதாபாத்திரங்களில் விஜய் நடித்ததை ரசித்து பார்த்தேன். அதில் இளைய தோற்றத்தில் வரும் விஜய் மிரட்டியிருக்கிறார். வெங்கட் பிரபுவின் திரைக்கதை மிகவும் ரசிக்க கூடியதாகவும் ஈர்க்கக்கூடியதாகவும் இருந்தது. வி.எஃப்.எக்ஸ் முயற்சி பாராட்டத்தக்கது. இந்தப் படம் அனைத்து தரப்பு பார்வையாளர்களாலும் தியேட்டரில் பார்க்க வேண்டிய படம். வெங்கட் பிரபு முதல் படத்திலிருந்து தனது நண்பர்களுக்கு ஒரு ஷாட்டையாவது படத்தில் வைத்துவிடுவார், அது எனக்கு ரொம்ப பிடிக்கும். இது மிகவும் நல்ல விஷயம்” என்று குறிப்பிட்டுள்ளது.