nithya menon reacts about national award ciriticism

திரைத்துறை கலைஞர்களை பெருமைப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் தேசிய விருதுகள் வழக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2022ஆம் ஆண்டிற்கான தேசிய விருது வென்றவர்களின் பட்டியலை கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது. அதில் தனுஷ் நடிப்பில் மித்ரன் ஆர். ஜவஹர் இயக்கத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. சிறந்த நடிகைக்கான விருது நித்யா மேனனுக்கும் சிறந்த நடன இயக்குநருக்கான விருது ‘மேகம் கருக்காதா...’ பாடலுக்காக ஜானி மற்றும் சதீஷ் ஆகியோருக்கும் தெரிவிக்கப்பட்டது.

இதில் நித்யா மேனனுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்றிருந்தாலும் சிலரால் விமர்சனங்களையும் எதிர்கொண்டது. அந்த வகையில் ‘கார்கி’ படத்திற்காக சாய் பல்லவிக்கு கொடுத்திருக்கலாம் என்று சிலர் கருத்து கூறி வந்தனர். இந்த நிலையில் விமர்சனங்கள் குறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில், நித்யா மேனன் பேசியுள்ளார்.

அவர் பேசுகையில், “ஒரு பக்கம் பாராட்டு தெரிவிக்க பலர் இருக்கும்போது இன்னொரு பக்கம் விமர்சனம் செய்வதற்கும் சிலர் இருக்கின்றனர். விமர்சனம் செய்பவர்கள் குறித்து நான் யோசிக்க வேண்டிய அவசியமில்லை. நான் பாராட்டுபவர்கள் பக்கம் என் கவனத்தை செலுத்த விரும்புகிறேன். என்ன பண்ணினாலும் சிலர் எதாவது விமர்சித்து கொண்டுதான் இருப்பார்கள். என்னுடைய ஒளிப்பதிவாளர் நண்பர் ஒருவர், ‘உனக்கு திருச்சிற்றம்பலம்தான் சரியானது, இதுபோன்ற படங்களுக்கு காஷ்ட்யூம், மிகப்பெரிய செட் எதுவும் தேவை இல்லை. இயல்பாக நடிப்பை மட்டும் கொடுத்தால் போதும்’ என்று கூறினார். எனக்கும் அது சிறந்ததாக தெரிந்தது” என்றார்.