இயக்குநர் மற்றும் நடிகரான அமீர், கடைசியாக ஆதி பகவான் என்ற படத்தை இயக்கியிருந்தார். நடிகராக உயிர் தமிழுக்கு படத்தில் நடித்திருந்தார். கடந்த மே மாதம் இப்படம் வெளியான நிலையில் ஓரளவு வரவேற்பை பெற்றிருந்தது. இதையடுத்து இறைவன் மிகப் பெரியவன் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத் தயாரிப்பாளர் போதைப் பொருள் வழக்கில் சிறையில் இருப்பதால் இப்படம் குறித்த அப்டேட் இன்னும் வெளியாகவில்லை. இந்தப் படத்தை தவிர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
திரைப்படத்தை தாண்டி சமூக நிகழ்வுகள் குறித்தும் தனது கருத்தை வெளிப்படையாக சொல்லி வரும் அமீர், தற்போது இளையராஜா ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் அர்த்த மண்டபத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் குறித்து பேசியுள்ளார். திரு.மாணிக்கம் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், பின்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இளையராஜா விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “நான் ஒரு இறை நம்பிக்கையாளன். இந்த பிரபஞ்சத்தையும் மனிதர்களையும் கடவுள் படைத்தது உண்மையாக இருந்தால். மனிதர்களிடம் கடவுள் பாகுபாடு பார்க்கக் கூடாது. அப்படி பார்ப்பவர் கடவுளாக இருக்க முடியாது. அதை எந்த மதம் சொன்னாலும் தவறுதான். இந்த கொள்கையில் நான் உறுதியாக இருக்கிறேன்.
அதனடிப்படையிலே நாட்டின் முதலமைச்சராக இருந்தாலும் இந்த தேசத்தின் முதல் குடிமகனாக இருந்தாலும் ஒரு சமத்துவம் இல்லாத நிலை இருப்பதாக நான் கருத்து தெரிவித்திருந்தேன். ஆனால் தொலைக்காட்சியில் வந்த செய்தியில் உண்மை இல்லை, அப்படி எதுவுமே நடக்கவில்லை, நான் சுயமரியாதையை விட்டு கொடுப்பவன் அல்ல என இளையராஜா சொன்ன பிறகு அது குறித்து பேசுவது அர்த்தமற்ற ஒன்று. அதை கடந்துவிடுவது நல்லது” என்றார்.